ஹெலிகாப்டர் ஷாட்களுக்குக் குத்தகைக்காரன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாள் என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமான தீபாவளிக் கொண்டாட்டம். 40வயதைத் தொடுகிறார் மகேந்திர சிங் தோனி. 20-20 கோப்பைகள் தொடங்கி ஆசியக் கோப்பை உலகக் கோப்பை என கிரிக்கெட்டின் அத்தனைக் கோப்பைகளையும் வாரிச் சுருட்டியது கேப்டன் கூல் தலைமையிலான இந்திய அணி.




சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தபடி கடந்த சுதந்திர தினத்தன்று பாடல் ஒன்றைப் பதிவிட்டு தனது சர்வதேசப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தவர் தற்போது வீடியோ கேம்ஸ்களே கதியெனக் கிடக்கிறார் எனச் செல்லமாகப் புகார் சொல்கிறார் அவரது மனைவி சாக்‌ஷி சிங் தோனி. 






தோனியின் வீடியோ கேம்ஸ் ஆர்வம் ஊரறிந்த ரகசியம். ஹோட்டல் அறைகளில் அணி வீரர்களுடன் ப்ளே ஸ்டேஷனில் புகுந்துவிளையாடுவதாகட்டும் அல்லது ஏர்போர்ட் லாபிக்களைக்கூட மறந்து பப்ஜியில் மூழ்கிக்கிடப்பதாகட்டும் தோனியின் வீடியோகேம் வெறி வைரலாக அவரது ரசிகர்களுக்கும் ஒட்டிக்கொண்டது எனலாம். ஆனால் அவரது இந்த ஆர்வத்தின் அளவு எதுவரை? அண்மையில் சாக்‌ஷி இதுபற்றி பேசியிருக்கிறார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் ட்விட்டரில் பகிர்ந்திருந்த வீடியோ ஒன்றில் இதுபற்றிப் பேசியுள்ளார் சாக்‌ஷி. எப்போதும் ஆக்டிவ்வாக இயங்கும் தோனியின் மூளையை சிறிது நேரமும் திசைதிருப்புவதே வீடியோ கேம்கள்தான் எனக் கூறியுள்ளார் அவர். இன்னும் சொல்லப்போனால் தூக்கத்தில் கூட பப்ஜி கேம் பற்றிப் பேசுவாராம். ’தோனி எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் ஓய்வு எடுப்பதே இல்லை. அவர் கால் ஆஃப் ட்யூட்டி அல்லது பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடுவது அவருக்கு ஓய்வு தருகிறது. அவர் அப்போது வேறு எதுபற்றியும் யோசிப்பதில்லை. அது நல்ல விஷயம்தான்’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் சாக்‌ஷி. 




‘அவரது வீடியோ கேம் ஆர்வம் என்னை சலித்துக்கொள்ளச் செய்வதில்லை.ஆனால் அவரது பப்ஜி விளையாட்டு ஆர்வம் படுக்கையறை வரை வந்துவிட்டது. படுக்கையில் எனக்குக்கூட இடம் இல்லாத அளவுக்கு பப்ஜி முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. சில நேரம் அவர் என்னோடு பேசுகிறார் என நினைப்பேன்.ஆனால் ஹெட்போனில் பப்ஜி விளையாடுபவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அது போதாது என்று தூக்கத்தில் வேறு அதுபற்றிப் பேசுவார்’ எனக் கூறியுள்ளார். பப்ஜி உலகக்கோப்பை போட்டி வைத்தால் அதற்கான இந்திய அணி கேப்டனும் இப்போதே தயார்.