இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்த நிலை... சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழல்... ஆனால் தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை நிறைந்திருந்த ரேவதிக்கு இது எதுவுமே பெரும் சுமையாக தெரியவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. அதில் கலப்பு 4*400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவில் மதுரையை சேர்ந்த ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


வறுமையான குடும்ப சூழலில் தனது இளம் பருவத்தில் பாட்டியுடன் வசித்து வந்தார் ரேவதி. கடுமையான குடும்ப நெருக்கடிக்கு மத்தியில் பாட்டி ஆர்மால், ரேவதி மற்றும் அவரின் தங்கை ரேகா ஆகிய இருவரும் வளர்த்துள்ளார். வீட்டில் ஒரு வேலை சாப்பாடு மட்டுமே பல நாள் உண்ணும் நிலை இருந்துள்ளது, ஆனால் இது எதையும் கடந்து துவண்டு போகவில்லை ரேவதி.  



2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பயின்ற ரேவதி, இதற்கு மேல் வாழ்க்கையில் இழக்க எதுவுமில்லை என்ற எண்ணத்துடன் தன்னம்பிக்கை ஒளிர ஓடினார். அப்போது மாநில அளவில் நடைபெற்ற ஒரு போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட ரேவதியின் திறமையை கண்டு வியந்து போன மதுரை பயிற்சியாளர் கண்ணன், அவருக்குள் இருக்கும் அபார திறமையை பாராட்டி தொடர்ந்து விளையாட்டில் கிவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும் ரேவதிக்கு தேவையான பொருளாதர உதவி மற்றும் பயிற்சியை அளித்த கண்ணன், தன் வீட்டிலேயே அவரை தங்கவைத்து உணவளித்து தன் மகள் போல் பார்த்துக்கொண்டுள்ளார். இதனால் தடகளத்தில்  சிறப்பாக செயல்பட்ட ரேவதிக்கு லேடி டாக் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அங்கே சென்று தனது அடுத்தகட்ட தடகள பயிற்சியை தொடர்ந்த ரேவதி மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தேசிய முகாமில் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அங்கு சென்றவுடன் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து 400 மீட்டர் ஓட்டத்திற்கு தனது இலக்கை மாற்றிக்கொண்டார் ரேவதி.


இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் ஓடிய ரேவதி, 53.55 நொடிகளில் 400 மீட்டரை கடந்து முதல் இடத்தை பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


இந்த மிகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து கொண்ட ரேவதி "ரொம்ப ஹாப்பியா இருக்கு.. ஒலிம்பிக் தேர்வாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.


மேலும் "எனக்கு தாய் தந்தை கிடையாது, கஷ்ட பட்டேன், சாப்பாட்டுக்கே வழியில்லை.. 4 வருஷம் கடுமையாக உழைத்தோம், நிறைய ட்ரெய்னிங் செஞ்சோம்" என்று ரேவதி தெரிவித்துள்ளார்.


அதிலும் தமிழ்நாட்டில் இருந்து முதல் முறையாக வீராங்கனைகள் நாங்கள் தேர்வாகியுள்ளது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் சாதனை பயணம் தொடர ABP செய்தி நிறுவனத்தின் வாழ்த்துக்கள்..