உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக வலம் வருபவர் நோவக் ஜோகோவிச். செர்பியாவைச் சேர்ந்த இவருக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், உலகின் முக்கியமான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா வந்த அவரின் விசா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்தாத காரணத்தாலே அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதே போல, பிரான்சு நாட்டிலும் பயணம் செய்பவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் செய்வது, பொது இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக்குவது என தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
இதனால், ஆஸ்திரேலிய ஓபனை அடுத்து நடக்க இருக்கும் மற்றொரு முக்கியமான கிராட்ண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ப்ரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச் பங்கேற்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா ஓபன், ப்ரெஞ்ச் ஓபன், விம்ப்ள்டன் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் இந்த நான்கு தொடர்களே டென்னிஸ் உலகின் மிகப்பெரிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நான்கு தொடர்களும் நடைபெறும். இந்த நான்கு ஓபன் தொடர்களையும் வெல்லும் வீரரை காலண்டர் இயர் ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையைத் தட்டிச் செல்வார்.
இது குறித்து பிரெஞ்சு நாட்டு விளையாட்டு அமைச்சகம் தெரிவிக்கையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை கட்டாயம் உறுதி செய்ய இருக்கிறோம். இதில் யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே ஜோகோவிச்சின் விளையாட்டு எதிர்காலம் சீராக இருக்கும் இல்லையென்றால் பல முக்கிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களை தவறவிடுவார் என தெரிகிறது.
கொரோனா வைரஸால், ஒலிம்பிக் போன்ற முக்கியமான விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் நடக்க இருக்கும் விளையாட்டு தொடர்களுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்