இந்தியா நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 18-ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. பெரும்பாலும் இங்கிலாந்து மைதானங்கள் ஸ்விங் பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் கை ஓங்கி இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்..
ஆனால் அண்மையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி, சுழற் பந்துவீச்சும் சிறப்பாக இருந்ததே தொடரை வெல்ல காரணமாக அமைந்தது. உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்கள். அதேநேரம் வெளிநாட்டு வீரர்களின் பலமாக சுழற்பந்து வீச்சு என்றுமே இருந்ததில்லை, பெரும்பாலான நேரங்களில் வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் தடுமாற்றத்தையே சந்தித்துள்ளனர்.
அதனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க தற்போதே தயராக தொடங்கிவிட்டனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். அதற்கு ஒரு புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். வெளிநாடுகளில் வீட்டில் பூனைகளை செல்லமாக வளர்ப்பவர்கள், பூனைகள் தங்கள் கழிவுகளை கழிப்பதற்காண பகுதிகளில் சிறிய துகள்களை கொட்டி வைத்திருப்பார்கள். அதுவே "கிட்டி லிட்டர்" என சொல்லப்படுகிறது. இவை பார்ப்பதற்கு சிறிய தானியங்கள் போல் இருக்கும்.
இதனை மைதானங்களில் பேட்டிங் பயிற்சி செய்யும் இடங்களில் தூவி, அதன் மேல் பேட்டிங் பயிற்சியை மேற்கொள்கின்றனர் நியூசிலாந்து அணி வீரர்கள். அந்த சிறிய துகள்களின் மீது சுழற்பந்துகளை வீசும் போது, அதன் மீது பட்டு பந்துகள் வேகமாக திரும்பி சுழன்று வரும். அவ்வாறு திரும்பும் பந்துகளை எதிர்கொண்டு, இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க தயாராகிவருகிறார்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேனான கான்வே கூறுகையில் "இந்தப் பயிற்சி மேற்கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது, ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் என்ற ஆட்ட வியூகத்தை அமைக்க இந்த பயிற்சி மிகவும் நல்லது" என குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாகவே, நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இந்த நிலையில் முன்கூட்டியே சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணிக்கு இவை அனைத்தும் எந்த அளவு கை கொடுக்க போகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்..