2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர், பல பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது. ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அளித்தார்.





இடைக்கால அறிக்கையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும். வழக்கில் சிக்கி படிக்க, வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வன்முறை தொடர்பான இடைக்கால அறிக்கையை 8 மாதங்களுக்கு முன்பு அப்போதைய அதிமுக அரசிடமும் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.