திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஆட்சியர் சிவன் அருள், "தற்பொழுது அதிவேகமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகிவரும் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம், தற்போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், மருத்துவ உதவிகளுக்காக பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இதனால், நோய்ப்பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' (Tele Medicine Service ) தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில் 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இங்கு 24 மணிநேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை இந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் தங்களின் உடல் நிலை, நோய்க்கான அறிகுறிகள், அதற்குத் தேவையான மருத்துவ அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம். அதேபோல, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகளைக் கண்காணித்து அவர்களுக்கு வழிகாட்ட இந்த 'தொலைத்தொடர்பு மருத்துவ சேவை' கூடுதல் பலனாக இருக்கும். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை தொடர்பு கொள்ள 94999-33821, 94999-33822 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். பொதுமக்கள் தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை பயன்படுத்தி கொரோனா நோயிலிருந்து மீண்டு வரவேண்டும் என்பதால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


இது மட்டுமின்றி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அவசரக்கட்டுப்பாட்டு அறையின் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி என்ன? பரிசோதனை மையங்கள் எங்கெல்லாம் உள்ளது? தடுப்பூசி மையங்கள் எத்தனை உள்ளன? கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் அதை சார்ந்த தகவல்களை பெற 04179-222111, 04179-229008, 04179-1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.