இந்திய ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஜெனாவின் விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். புடாபெஸ்டில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கிஷோர் குமார் ஜெனாவின் ஒரு மாத விசாவை ஹங்கேரி தூதரகம் ரத்து செய்ததையடுத்து, அவர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது சந்தேகம்தான். 


கிஷோர் குமார் ஜெனாவின் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து நேற்று இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டது. அதில், “என்ன காரணங்களுக்காக டெல்லியில் உள்ள ஹங்கேரிய தூதரகம் அவரது ஒரு மாத விசாவை ரத்து செய்தது என்று தெரியவில்லை. இதனால், ஈட்டி எறிதல் வீரர்  கிஷோர் குமார் ஜெனா அதிர்ச்சியில் உள்ளார்" என்று பதிவிட்டது. 





தொடர்ந்து தனது அடுத்த ட்வீட்டில், “ஈட்டி எறிதல் வீரர் ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் குமார் ஜெனாவுக்கு கடந்த மாதம் ஒரு மாத ஷெங்கன் விசா வழங்கப்பட்டது. அவர் ஆகஸ்ட் 20 அன்று புடாபெஸ்ட் செல்ல இருந்தார். விசா ரத்து செய்யப்பட்டால், அவர் பங்கேற்க முடியாது.” எனவும் குறிப்பிட்டது. 





இதையடுத்து, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் குமார் ஜெனாவுக்கு உதவுமாறு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “கிஷோர் குமார் ஜெனாவுக்கு விசா பிரச்சனை இருப்பதாக கேள்விப்பட்டேன், இது உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்காக ஹங்கேரிக்கு செல்ல விடாமல் அவரை தடுக்கிறது. இது அவர்களின் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணங்களில் ஒன்றாக இருப்பதால், அதிகாரிகள் தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன். நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்." என்றார். 






கடந்த ஜூலை 30ம் தேதி அன்று, இலங்கையில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பில் 84.38 என்ற தனிப்பட்ட சாதனையுடன் தங்கம் வென்றார். இந்த சாதனை மூலம் இவர் உலக தடகள சாம்பியன்ஷிப்பின் உலக தரவரிசை பட்டியலிலும் இடம்பிடித்தார். மேலும், இந்த வெற்றிக்கு பிறகு, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற நான்கு வீரர்களில் ஜெனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிபி மனு மற்றும் ரோஹித் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றனர். ஆனால், இவர்கள் இருவரும் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.