கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா நஞ்சை புகலூர் ஊராட்சி தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 50 அடிக்கும் மேல் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி பெரிய கிணறு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், நஞ்சை புகழூர், தவுட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் பொது கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு முன்பு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கிராமசபை கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்ட பணி நடைபெறக்கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இதன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கரூர் கோட்டாட்சியர் ரூபினா, புகலூர் வட்டாட்சியர் முருகன், துணை நிலநீர் வல்லுநர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்சனை ஏதும் ஏற்படலாம் என கருதி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பொதுமக்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றின் தண்ணீர் அளவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிறகு தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.