26 வது மகளிர் கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் தொடர் கேரளாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில், தமிழக அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று மேற்கு வங்கத்தை எதிர்கொண்டது. வலுவான மேற்கு வங்கத்திற்கு எதிராக 1-1 என போட்டியை டிரா செய்திருக்கிறது. இந்த தொடரில் தமிழக அணி H பிரிவில் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடுடன் பஞ்சாப், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன.

 

தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில்  தெலுங்கானாவை எதிர்கொண்டு 20-0 என பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது. நான்கு வீராங்கனைகளை ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தனர். அறிமுக போட்டியில் ஆடிய சந்தியா 8 கோல்களை அடித்திருந்தார். இந்த வெற்றி மூலம் தமிழ்நாட்டிற்கு 3 புள்ளிகள் கிடைத்திருந்தது.



 

அதேநேரத்தில், மேற்கு வங்க அணி தனது முதல் போட்டியில் பஞ்சாபை எதிர்கொண்டிருந்தது. இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்க முடியாமல் போட்டி 0-0 என டிராவில் முடிந்திருந்தது. இதனால் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அணிகளுக்கு தலா 1 புள்ளி மட்டுமே கிடைத்திருந்தது. இந்நிலையில், இந்த இரண்டாவது போட்டியை வென்று காலிறுதிக்கு தகுதிப்பெறும் முனைப்போடு தமிழக அணியும் முதல் வெற்றியை பெறும் முனைப்போடு மேற்கு வங்க அணியும் இன்று நேருக்கு நேர் மோதின.

 

கடந்த போட்டியில் சிரமமே இன்றி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வென்றதால் அதே சந்தியா, சரிதா, மாளவிகா, துர்கா, சுமித்ரா, பிரியதர்ஷினி, பவித்ரா, கௌசல்யா, முத்து, துர்கா, தேவி 11 வீராங்கனைகளோடு போட்டியை தொடங்கியது. 5-2-3 ஃபார்மேஷனொடு தமிழகம் களமிறங்க, மேற்கு வங்கம் 4-4-2 ஃபார்மேஷனோடு களமிறங்கியிருந்தது. முதல் பாதியின் முதல் பாதி முடிவதற்குள்ளேயே தமிழ்நாடு தனது முதல் கோலை அடித்தது. கடந்த போட்டியில் நாயகியாக ஜொலித்த சந்தியாவே இந்த கோலை அடித்துக் கொடுத்திருந்தார். இதன் மூலம் தமிழ்நாடு 1-0 முன்னிலை பெற்றது. 



 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கு வங்க அணி 45 வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது. அந்த அணியின் சுமித்ரா இந்த கோலை அடித்து கொடுக்க போட்டி 1-1 என சமன் ஆனது. இரண்டாம் பாதி முழுவதும் இரண்டு அணிகளும் எவ்வளவோ முயன்றும், முன்னிலை பெறுவதற்கான அந்த ஒரு கோல் மட்டும் கிடைக்கவே இல்லை. இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

 

இப்போது க்ரூப் H இல் 4 புள்ளிகளுடன் பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன. இரண்டு அணிகளும் 4 புள்ளிகள்தான் என்றாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பஞ்சாப் அணி முதலிடத்தில் இருக்கிறது. மேற்கு வங்கம் 2 புள்ளிகளோடு மூன்றாம் இடத்திலும் தெலுங்கானா புள்ளிக்கணக்கை தொடங்காமல் கடைசி இடத்திலும் இருக்கிறது.

 

இந்த க்ரூப்பில் முதலிடத்தை பிடிக்கும் ஒரு அணி மட்டுமே காலிறுதிக்கு தகுதிப்பெற முடியும். இப்போதைய சூழலில் பஞ்சாப், தமிழ்நாடு, மேற்கு வங்கம் என மூன்று அணிகளுமே காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றன. நாளை மறுநாள் நடக்கும் லீக் சுற்றின் கடைசி போட்டி Do or Die போட்டியாக அமையும். தமிழ்நாடு Vs பஞ்சாப் அந்த போட்டியில் தமிழ்நாடு வெல்லும்பட்சத்தில் காலிறுதிக்கான வாய்ப்பு அதிகமாகும். கடந்த சீசனில் மூன்றாவது இடத்தை பிடித்த தமிழக சிங்கப்பெண்கள் இந்த முறையும் சாதிப்பார்கள் என்கிற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது.