விளையாட்டுத்துறையில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு தயான்சந்த் கேல்ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சாரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது.






இந்த நிலையில், நடப்பாண்டிற்கான விருதுகள் பெறும் வீரர்கள் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கேல் ரத்னா, அர்ஜூனா விருது:


தமிழ்நாட்டின் சார்பில் செஸ் போட்டியில் தலைசிறந்து விளங்கும் இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கும், வாள்வீச்சில் சிறந்து விளங்கும் இளவேனிலுக்கும் அர்ஜூனா விருதை குடியரசுத்தலைவர் திரௌபதி விருது வழங்கி கவுரவித்தார். முன்னதாக, டேபிள் டென்னிசில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமலுக்கு விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது எனப்படும் தயான்சந்த் கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவிற்காக டேபிள் டென்னிசில் ஒலிம்பிக் போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும், பல்வேறு சர்வதேச போட்டியிலும் ஆடியுள்ள சரத்கமல் மட்டுமே நடப்பாண்டில் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வெல்லும் நபர் ஆவார்.


தடகள வீராங்கனை சீமா புனியா, பேட்மிண்டன் வீரர் பிரனாய், ஜூடோவில் முதன்முறையாக இந்தியாவிற்காக காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற சுஷிலா தேவி, பாரா வீரர்களான தருண் தில்லான், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.


துரோணாச்சாரிய விருது:


சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியர் விருது ஜிவான்ஜோத்சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி ஓமர்(குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா துப்பாக்கிச்சூடு) மற்றும் சுஜித்மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


அஸ்வினி அக்குஞ்சி (தடகளம்), தரம்வீர்சிங் (ஹாக்கி), பி.சி.சுரேஷ்(கபடி) மற்றும் பகதூர் குருங்(பாரா தடகளம்) ஆகியோருக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட்டது. மௌலான அபுல்கலாம் அசாத் டிராபி எனப்படும் மாகா டிராபி இந்த முறை அமிர்தரசஸ் குருநானக் தேவ் பல்கலைகழகத்திற்கு வழங்கப்பட்டது.