சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர கொடிகம்பத்தில் அதிமுக கொடியை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.


தொடர்ந்து விழாவில் உடையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ”ஓராண்டு கால திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும் நடக்கவில்லை. ஸ்டாலின் அரசு திறமையற்ற அரசாக உள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் என பிரச்னைகள்தான் உள்ளது என்றார். தேர்தல் நேரத்தில் சொன்னபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு தற்போது 50 நிபந்தனைகள் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். கடன் பெற்றவர்கள் 45 லட்சம் பேர் ஆனால் 15 லட்சம் பேருக்குதான் கடன்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை என்ன? என்று அவர் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தார்.



குறிப்பாக, பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்குவதாக கூறி பலர் நம்பி வாக்களித்தனர்; ஆனால் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. முதியவர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்று கூறி அவர்களையும் ஏமாற்றியவர் ஸ்டாலின். இப்படி, கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை தேர்தல் வந்தால் அழகா பேசுவார்! முடிந்ததும் அப்படியே கைவிட்டுவிடுவார் ஸ்டாலின் என்றும் அவர் விமர்சித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மானிய விலை இருசக்கர வாகனத்திட்டம், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடி கணிணி திட்டம் போன்றவற்றை நிறுத்திவிட்டனர். ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நான் முதலமைச்சராக இருந்த போது மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏழை மக்களின் மீது பாசம் கொண்ட அரசு அதிமுக அரசு; கிராமத்தில் பிறந்து ஏழை மக்களோடு வாழ்ந்தவன் என்பதால் ஏழைகளின் கஷ்டம் எனக்கு புரியும்.



இப்போது இருக்கும் முதலமைச்சருக்கு ஒன்றுமே தெரியாது. குடும்பம் வளரனும், குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வேண்டும் என்பதே நோக்கம். வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வருவதற்கு திமுக என்ன ராஜ பரம்பரையா? எந்த நிலையில் இருப்வர்களும் பதவிக்கு வரமுடியம் என்பதுதான் அதிமுக என்று கூறிய எடப்பாடி பழனிசாமி திமுக நான் இருந்திருந்தால் முதலமைச்சராகவோ? எதிர்க்கட்சித்தலைவராகவோ வந்திருக்க முடியுமா? என்றார். அதிமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல பேர் உயிரிழந்தும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, திமுகவில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் இல்லை உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என மேலும் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர் என்றும் சாடினார்.