ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஒருவாரம் புத்துணர்வு பயிற்சி:
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்தது முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகள் சரியாக பள்ளிகள் சரியாக செயல்படாத நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் வழக்கம் போல பள்ளிகள் இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்கப்படுகின்றன. மாணவர்கள் பள்ளிக்கு வரும் முதல் நாளிலேயே பாட வகுப்புகள் எடுக்காமல் ஒரு வாரத்திற்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள் தொடங்கப்படும் முதல் ஒருவாரத்திற்கு பாடங்களுக்கு பதில் புத்துணர்வு பயிற்சி, நல்லொழுக்கம், மற்றும் உளவியல் ரீதியிலான வகுப்புகளும் நடத்துமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஒருவாரத்திற்குப் பிறகு வழக்கமான பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
பள்ளி வகுப்பறைகள், வளாகங்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
அதே சமயம், காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 8 பாடவேளைகளாக பிரித்து, அதற்கான அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 2022-23ம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியில் உள்ள நாள்களில், தலா 40 நிமிடங்களுக்கு எட்டு அமர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் திட்டம்:
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். வரும் 2025ம் ஆண்டுக்குள் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ’இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’ ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படை கணிதச் செயல்பாடுகளை செய்யும் திற்ன்களையும் பெற்றிருக்க வேண்டும். இதற்காக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, சூழ்நிலையியல் பாடக்கருத்துகளுடன் ஒருங்கிணைத்து கற்பிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று தொடங்கும் நிலையில், வரும் ஜூன் 20-ம்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.