தேசிய விளையாட்டு போட்டிகள் 7 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போட்டியில் மகளிருக்கான ஸ்கேட் போர்ட் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி கமலி பங்கேற்றார். பார்க் ஸ்கேட்போர்டிங் பிரிவு இறுதிப் போட்டி கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது. 


இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கமலி 12.22 என்ற நேரத்தில் ஸ்கேட்போர்டிங் செய்து அசத்தினார். அத்துடன் இந்தப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார். அத்துடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இந்தப் பிரிவில் கேரளாவைச் சேர்ந்த வித்யா தாஸ் தங்கப்பதக்கத்தை வென்று இருந்தார். 






இந்நிலையில் கமலி கடந்து வந்த பாதை என்ன?


மாமல்லபுரத்திலுள்ள மீனவர் பகுதியில் வசித்து வருபவர் கமலி. இவருடைய தாய் சுகந்தி, அதிகாலை தொடங்கி இருட்டும் வரை, கடற்கரைக் கோயில் அருகே உள்ள கடையில் ஜூஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்து வருகிறார்.  தன்னுடைய  4 வயது முதல் கமலி ஸ்கேட் போர்ட் வைத்து விளையாட தொடங்கியுள்ளார்.


கமலியின் மாமா சந்தோஷ் மூர்த்தி, தொழில்முறை சர்ஃபர். கடலில் சர்ஃபிங் செய்வதற்காக சர்ஃபிங் போர்டையும், ஸ்கேட்போர்டையும் அவர்தான் முதலில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சந்தோஷின் துணையோடு சர்ஃபிங் செய்தாலும், தினமும் தன்னிச்சையான ஆர்வத்தோடு ஸ்கேட்போர்டு பயிற்சி செய்து வந்துள்ளார். 






அயர்லாந்தைச் சேர்ந்த எய்ன் எட்வார்ட்ஸ் கமலியின் ஸ்கேட் போர்டிங் சாகசத்தை பார்த்து வியந்துள்ளார். அதன்பின்னர் கமலி குடும்பத்துடன் நன்றாக பழகிய எய்ன் எட்வார்ட்ஸ் கமலியை ஜேமி தாமஸிடம் அறிமுகம் செய்துள்ளார். ஸிரோ ஸ்கேட் போர்டிங் என்ற பெயரில் பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறார். அங்கு அவர் கமலிக்கு பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளார். 


அதன்பின்னர் தொடர்ந்து ஸ்கேட் போர்டிங் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவருடைய வாழ்க்கை தொடர்பாக ஒரு ஆவணப்படமும் வெளியானது. கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு, இச்சூழலில் தற்போது 12 வயதில் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று கமலி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 


கமலிக்கு வாழ்த்துக்கள்..