கரூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


கரூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவில் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்-ஐ வஞ்சித்து ஒற்றை தலைமை கோட்பாட்டை கொண்டு வந்தார் எடப்பாடி.


 




 


தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன். மீண்டும் நான்கு பேரும் இணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தது போல, அதிமுக மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஜனநாயக மாண்பை மறந்து, சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அதனால் அவருக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன்” என்று பேசினார்.


 



 


முன்னதாக, தனியரசு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் கரூரில் நடந்தது. பேரவை கரூர் மாவட்ட செயலாளர் அருள் குமார் வரவேற்றார். 27 தீர்மானங்களை நிர்வாகிகள் முன்மொழிந்து, வழி மொழிந்தனர். பேரவை நிறுவனர் தனியரசு பேசியதாவது: வரும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துக்குள் ஒரு குறிப்பிட்ட நாளில் தனி அரசு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை திறந்தவெளி மாநாடு நடத்தப்படும். அதில் புதிய மாநில கட்சி தொடங்கப்படும். கட்சி பலப்படுத்தப்பட்டு 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடும் கட்சி சார்பில் பலர் எம்பி யாக உயர்ந்திடும் நிலை உருவாகும். எதிர்காலத்தில் அது தேசிய கட்சியாக உயர்ந்திடும் என்றார். 



உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்று தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பசும்பால் விலையை லிட்டர் 50 ஆக உயர்த்த வேண்டும். கரூர், ஈரோடு, நாமக்கல் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் சீராகும் வரை ஜிஎஸ்டி, வருமான வரி, பத்திரப்பதிவு வரி போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். பேரவை தொடங்கி 21 ஆண்டு ஆன நிலையில் புதிய பெயருடன் மாநில அரசியல் கட்சியாக பேரவையை தகுதிப்படுத்துவது என்பது உட்பட 23 தீர்மானங்களை நிறைவேற்றினார். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ராஜீவ் காந்தி, சதீஷ், ரமேஷ், முருகன், வக்கீல் பாஸ்கர், கணேசன் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்