இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் இந்திய அணி 237 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 221 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மூன்றாவது டி20 போட்டி இன்று இந்தோரில் நடைபெற உள்ளது.


இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியிலிருந்து இந்திய வீரர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மூன்று நாட்கள் ஓய்விற்கு பிறகு அக்டோபர் 6ஆம் தேதி டி20 உலகக் கோப்பை செல்லும் இந்தியா அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. அத்துடன் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கும் இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


 






நீண்ட ஓய்விற்கு பின்பு ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ஆசிய கோப்பையில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார். அத்துடன் ஒரு சதமும் அடித்தார். ஓய்விற்கு பிறகு விராட் கோலி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 404 ரன்கள் அடித்துள்ளார். ஆகவே இவருடைய ஃபார்ம் தொடர்பாக வந்த விமர்சனங்கள் அனைத்தும் தற்போது அடங்கியுள்ளன. இதன்காரணமாக அவருக்கு பெரிய தொடருக்கு முன்பாக சில நாட்கள் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


மேலும் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று விட்டதால் கடைசி போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்தவகையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


டி20 உலகக் கோப்பை சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:


23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான்  (மெல்பேர்ன்)


27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)


30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)


2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)


6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)


சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது. 


சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதேபோல் இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.