ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவ் ஆகிய இருவரும் மோதினர். இந்தப் போட்டியில் தொடக்கத்தில் முதல் இரண்டு செட்களையும் மெட்வதேவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார்.


அதன்பின்னர் சுதாரித்து கொண்ட ரஃபேல் நடால் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றை வென்று அசத்தினார். இதனால் இரண்டு பேரும் தலா 2 செட்களை வென்று இருந்தனர். இதன்காரணமாக போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 5ஆவது செட் நடைபெற்றது. இந்த ஐந்தாவது செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக இந்தப் போட்டி சென்றதால் இரு வீரர்களும் சற்று சோர்வு அடைந்து காணப்பட்டனர். இருப்பினும் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். 


 






இதனால் ஒரு கட்டத்தில் ஐந்தாவது செட்டில் இரு வீரர்களும் தலா 5 கேம்களை வென்று இருந்தனர். இறுதியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியை 2-6,6-7,6-4,6-4,7-5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்று அசத்தினார். அத்துடன் தன்னுடைய 21ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளார். 


 






அத்துடன் ரஃபேல் நடால் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அவர் 13 பிரஞ்சு ஓபன், 4 யுஎஸ் ஓபன், 2 விம்பிள்டன் ஓபன் மற்றும் 2 ஆஸ்திரேலியன் ஓபன் என மொத்தமாக 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார். 


மேலும் படிக்க: இந்தியாவின் சாதனை போட்டிக்கு கேப்டனாகும் ரோஹித் சர்மா- என்ன சாதனை தெரியுமா?