ஐ.பி.எல், 14வது தொடருக்கான 5வது போட்டியில் இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.


முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய மும்பை அணியும், முதல் ஆட்டத்தில் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தங்களது முதல் வெற்றியை பெறுவதற்காக இன்று களத்தில் இறங்குகிறது.


மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, குயிண்டின் டி காக்,  சூர்யகுமார் யாதவ், இஷான் கிசான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணால் பாண்ட்யா, ட்ரென்ட் போல்ட், பும்ரா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே களத்தில் இறங்கினர். கொல்கத்தா அணியிலும் அதிரடி வீரர் இயான் மோர்கன், ஆந்த்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன், பாட் கமின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் களத்தில் இறங்கினர்.




டாசில் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன், மும்பை அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து,மும்பை அணியில் ரோகித் சர்மாவும், குயிண்டின் டி காக்கும் ஆட்டத்தை தொடங்கினர். அந்த அணியின் குயின்டின் டி காக் 2 ரன்களுக்கு சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியால் 36 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுக்கு 56 ரன்களை குவித்து ஷகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


ரோகித் சர்மா 32 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும், குருணால் பாண்ட்யா 15 ரன்னும், பொல்லார்ட் 5 ரன்னும் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலே வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்துள்ளது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா பேட் செய்ய தயாராகியுள்ளது.


பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.