மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகமும் உலகப்புகழ் பெற்றது. கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் இல்லாமல் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. நடப்பாண்டிலும் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சித்திரைத் திருவிழா வரும் 15-ஆம் தேதி( நாளை மறுநாள்) கொடியேற்றத்துடன் தொடங்கிவரும் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி சித்திரைத் திருவிழா கோவில் வளாகத்திலே நடத்தப்பட உள்ளதால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான அட்டவணையை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொடியேற்ற நாளான 15-ஆம் தேதி பக்தர்கள் காலை 6 மணிமுதல் 9 மணிவரையிலும், மதியம் 11.30 முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும், இரவு 7.30 மணி முதல் 9 மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கொடியேற்ற தினத்தில் காலையில் 9 மணிமுதல் 11.30 மணிவரையிலும், மாலையில் 5.30 மணிமுதல் 7.30 மணிவரையிலும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
16-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பக்தர்கள் காலை 6 மணிமுதல் காலை 8 மணிவரையிலும், பின்னர் காலை 9 மணிமுதல் 12.30 மணிவரையிலும், மாலையில் 4 மணிமுதல் 5.30 மணிவரையிலும், இரவில் 7 மணிமுதல் 9 மணிவரையிலும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில், கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரையிலும், மாலையில் 5.30 மணிமுதல் 7.30 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.
பிரசித்தி பெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில், பக்தர்களுக்கு காலை 9.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரையிலும் அனுமதி அளிக்கப்படவுள்ளது. பின்னர், மதியம் 3.30 மணி முதல் 5.30 மணிவரையிலும், இரவு 7.30 மணிமுதல் 9 மணிவரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். அன்றைய நாளில், சுவாமி தரிசனம் மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளது.
25-ஆம் தேதி நடைபெறும் 11-ஆம் நாள் திருவிழாவிற்கு, பக்தர்கள் காலை 7 மணிமுதல் 12.30 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 5.30 வரையிலும், பின்னர் இரவு 7.30 மணிமுதல் 9 மணிவரையிலும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினத்தில் சுவாமி தேரோட்டம் மாலை 5 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும், சுவாமி புறப்பாடு மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் நடைபெறவுள்ளது.
12 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா 26-ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது. அன்றைய நாளில், பக்தர்கள் காலை 7 மணிமுதல் 10.30 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் 5.30 மணிவரையிலும், இரவு 7 மணிமுதல் 9 மணிவரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். 12-ஆம் நாள் திருவிழாவில், காலை 10.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரையிலும், மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.
மீனாட்சி திருக்கல்யாணத்தன்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமண கோலத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 27-ந் தேதி உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற உள்ளது.