இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இந்திய அணிக்காக மூன்று உலககோப்பையை வென்ற தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்தாண்டு தனது ஓய்வை அறிவித்தார். இருப்பினும், ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து ஆடி வருகிறார்.


2021ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐ.பி.எல். தொடர் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. தற்போது, ஐ.பி.எல். போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ந் தேதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அங்கு நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.




கடந்த சில தினங்களுக்கு தோனி தனது புதிய கெட்டப்பை வெளியிட்டார். மிகவும் மாடர்ன் ஹேர் ஸ்டைலில் இருந்த தோனியின் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், எம்.எஸ்.தோனி தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எஞ்சிய விவோ ஐ.பி.எல். 2021 போட்டிகளுக்காக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆட்டோ ஒன்று நிற்கிறது. பின்னர், தனது தோனி தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் ஒரு குடியிருப்பில் பின்னால் இரண்டு நபர்களுடன் ஐ.பி.எல். போட்டி பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்.


ஹிட்மேன், ஹெலிகாப்டர், கிங் என்று வசனங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஹிட்மேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவையும், ஹெலிகாப்டர் என்று எம்.எஸ்.தோனியையும். கிங் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியையும் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர். வீடியோவின் முடிவில் வரும் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கும் விவோ ஐ.பி.எல். 2021 போட்டித் தொடரை காணத்தவறாதீர்கள் என்று தெரிவிப்பதுபோல இந்த வீடியோ நிறைவடைகிறது.




தோனியே தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளதால் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்த வீடியோவில் தோனி தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் அதில் மஞ்சள் நிறத்தில் கலரிங்கும் செய்திருப்பதால் பார்ப்பதற்கு தோனி மிகவும் வித்தியாசமாக உள்ளார்.


2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் தோனி முடிசூடா மன்னனாகவே வலம் வருகிறார். அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 முறை சாம்பியனாகியுள்ளது. ஐ.பி.எல். தொடரின் மற்றொரு பலம் வாய்ந்த அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல நிலையில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.