’கூழாங்கல்’  திரைப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தனது தோழியும் காதலியுமான அறிவுநிலா என்பவரை மணந்துள்ளார். இயக்குநர் ராம் முன்னிலையில் கோவையில் அறிவுநிலாவை சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளார் வினோத்ராஜ். பெண் வீட்டார் தரப்பில் இந்தத் திருமணத்து எதிர்ப்பு இருந்துவரும் நிலையில் கோவையில் மிக எளிமையாக நண்பர்கள் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்துகொண்டுள்ளனர்.



 
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான திரைப்படம் கூழாங்கல். சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களுக்கு அந்தப் படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. போலாந்து, டொரோண்டோ, சின்சினாட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்தப்படம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 
















இயக்குநர் வினோத்ராஜை அழைத்து, திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்கு ஏபிபி நாடு சார்பாக வாழ்த்துகளைக் கூறினோம். தனது காதல் கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வினோத்ராஜ். ‘நான் மதுரைக்காரன். அவங்க காரைக்குடி. எம்.இ., படிச்சிட்டு இருக்காங்க. நான்கு வருடங்களுக்கு முன்பு தனுஷ்கோடி போய்விட்டு ரயிலில் திரும்பி வந்துகொண்டிருந்தபோதுதான் இருவரும் மீட் செஞ்சோம். ரயில் சிநேகமா பேசத் தொடங்கினோம். ஒருவருக்கு ஒருவர் நல்ல நண்பர்களா பழகிட்டு இருந்தோம்.இரண்டு வருடங்களுக்கு முன்புதான் காதலிக்கத் தொடங்கினோம். நமக்கு சினிமாதான் தொழில்னு முடிவான பிறகு நிறைய இடங்களுக்கு டிராவல் செய்யனும் நமக்கெல்லாம் இந்த காதல் சரிபட்டுவராதுனுதான் இருந்தேன்.ஆனால் அறிவுநிலா உறுதியா இருந்தாங்க.நம்மைப் புரிஞ்சுக்கறவங்க நம்ம கூட வாழறதும் மகிழ்ச்சியான விஷயம்தானே.நமக்குப் பிடிச்சதை நாம செய்யனும் அவங்களுக்குப் பிடிச்சதை அவங்க செய்யனும், ஒன்னா நல்ல நண்பர்களா வாழனும் அவ்வளவுதான். என்னைக்காவது ஒருநாள் அவங்களோட அம்மா அப்பா நம்மைப் புரிஞ்சுக்கிட்டு திரும்ப வருவாங்கனு நம்பிக்கை இருக்கு’ என்கிறார் வினோத். 


எண்ணம் ஈடேறட்டும் வினோத்.