இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் அவர் மீதான ரசிகர்களின் மோகம் குறையவில்லை. இவர் நடந்தால் கூட அதை வைரலாகும் ரசிகர்கள் மத்தியில், முன்னாள் அமெரிக்க அதிபரை சந்தித்தார் என்றால் சும்மா இருப்பார்களா..?


முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். இப்படியான சூழ்நிலையில், தோனி, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 









அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தோனியுடன் இணைந்து கோல்ப் விளையாடுவது போன்ற வீடியோக்கள் வெளியானது. இந்த விளையாட்டு முடிந்ததும் எம்.எஸ்.தோனி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் தாந்து சக நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதற்கு முன்பும் தோனி கோல்ஃப் விளையாடும் வீடியோக்கள் பலமுறை வெளியாகியுள்ளன. 






தோனிக்கு கிரிக்கெட்டை கடந்த கால்பந்து, டென்னிஸ், கோல்ஃப் மீது அதிக காதல் உள்ளது. சமீபத்தில் யுஎஸ் ஓபன் 2023ல் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஸ்வெரேவ் இடையேயான கால் இறுதிப் போட்டியைக் காண தோனி வந்திருந்த வீடியோவும் வெளியானது. இந்தப் போட்டியில் அல்கராஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


ஐபிஎல் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டிய பிறகு தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, அடுத்த சில மாதங்கள் மீண்டு வர நேரத்தைச் செலவழித்த அவர், இப்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.


மூன்று கோப்பையும் வென்ற ஒரே கேப்டன்: 


2007ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை, 2011ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணிகளின் கேப்டனாக இருந்த தோனி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 


ஐசிசியின் மூன்று முக்கியமான கோப்பைகளையும் (50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி.