டி20 உலககோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, மினி உலககோப்பை, ஐ.பி.எல். கோப்பை என்று தோனி முத்தமிடாத கோப்பையே இல்லை என்பதை காட்டிலும், தோனியை போல மேற்கண்ட அனைத்து கோப்பையையும் முத்தமிட்ட கேப்டன் இதுவரை யாருமே இல்லை என்பதுதான் உண்மை.


சிறந்த பினிஷர், சிறந்த கேப்டன் என்று பன்முகங்களுக்காக தோனி கொண்டாடப்பட்டாலும், அவரது முகத்தை கிரிக்கெட் உலகத்தின் திரையில் பிரம்மாண்டமாக காட்டியது அந்த “148” தான். 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான மூன்று ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார் மகேந்திர சிங் தோனி.




ஆனால், தனது சர்வதேச முதல் போட்டியிலே எந்த பந்தையும் சந்திக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கடைசி போட்டியில் மட்டும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்து 2005ம் ஆண்டு இந்தியாவிற்கு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. ராகுல் டிராவிட் பேட்டிங் பொறுப்புடன் கீப்பிங் பணியையும் மேற்கொண்டு வந்ததால், இந்திய அணிக்கு நிரந்தரமான விக்கெட் கீப்பர் ஒருவரை அப்போதைய கேப்டன் கங்குலி தேடிக்கொண்டிருந்த தருணம் அது.


பார்த்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு அளித்தும் அவர்கள் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், தோனிக்கு வாய்ப்பு அளித்தார் கங்குலி. வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் தோனிக்கு பெரியளவில் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காததால், அடுத்து இந்தியாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் தோனிக்கு கங்குலி வாய்ப்பு அளித்தார். அந்த தொடரில் முதல் போட்டியில் 6வது வீரராக களமிறங்கி 3 ரன்களை மட்டுமே தோனி எடுத்தார்.


இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றாலும் மைதானம் குவிந்துவிடும். அதுவும் இந்தியாவில் நடைபெற்றால் எப்படி இருக்கும்…? இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்வதாக கங்குலி அறிவித்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய சேவாக் –சச்சின் டெண்டுல்கர் ஜோடியில் சச்சின் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் அனைவரும் சோகம் அடைந்தனர். இருப்பினும் அடுத்ததாக கேப்டன் கங்குலி இறங்குவார் என்று எதிர்பார்த்தனர்.




கங்குலி எப்போதும் துணிச்சலான முடிவுகளை கடினமான நேரத்தில் எடுப்பதில் கெட்டிக்காரர். அன்று கங்குலிக்கு பதிலாக நீண்ட முடியுடன் 24 வயது இளைஞரான தோனி களமிறங்கினார். மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கும், கமெண்ட்ரி பாக்சில் அமர்ந்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி. பலம் மிகுந்த பாகிஸ்தான் அணியை திடீரென மைதானத்திற்குள் மட்டையுடன் நுழைந்த இந்த இளைஞனால் என்ன செய்துவிட முடியும் என்றே நினைத்தனர்.


ஆனால், அன்று மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு கிரிக்கெட் அதிரடியை தோனி விருந்தாக படைத்தார். தோனியின் அதிரடியைப் பார்த்து மிரண்டு போன பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார். முகம்மது ஷமி, அப்துல் ரசாக், ஷாகித் அப்ரிடி, அர்ஷத் கான், முகமது ஹபீஸ், நவீத் உல் ஹசன் என மாறி, மாறி பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார்.


ஆனால், தோனியோ யார் பந்துவீசினாலும் பந்தை மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு அனுப்புவதிலே குறியாக இருந்தார். அதுவரை இந்திய அணியின் அதிரடி மன்னனாக திகழ்ந்து வந்த சேவாக்கே, தோனியின் ஆட்டத்தை எதிரில் நின்று பார்த்து திகைத்தே போனார் என்பதுதான் உண்மை. கடைசியில் தோனி 123 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 148 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.  தோனி ஆட்டமிழந்தபோது இந்திய அணி 41.2 ஓவர்களில் 289 ரன்களை குவித்திருந்தது.




தோனி மட்டும் அன்று ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒருநாள் போட்டிகளில் முதலில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமை தோனியையே சார்ந்திருக்கும். தோனியின் அபார சதத்தால் இந்திய அணியும் 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தோனியும் தனது முதலாவது ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.


தோனி அன்று அடித்த 148 ரன்கள் இந்தியா முழுவதையும் தோனியை திரும்பி பார்க்க வைத்தது. அன்றைய தேதியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் மட்டுமே விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலுமே சிறந்த வீரராக திகழ்ந்து வந்தார். இதனால், இந்திய அணிக்கு கில்கிறிஸ்ட் கிடைச்சாச்சு என்று ஊடகங்கள் தோனிக்கு புகழாரம் சூட்டின. அன்று முதல் அணியில் நிலையான வீரராக மாறிய தோனி தன்னுடைய திறமையால் கேப்டனாக உயர்ந்து உலககோப்பை உள்பட பல கோப்பைகளை வென்று தந்து இந்திய அணியை உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணியாக மாற்றி வடிவமைத்துள்ளார்.




விக்கெட் கீப்பிங் செய்பவர்களுக்கும் சரி, கேப்டன்ஷிப் செய்பவர்களுக்கும் சரி அவர்களின் முன்னுதாரணம் யார் என்று கேட்டால் நிச்சயம் மகேந்திர சிங் தோனி என்றுதான் அவர்களிடம் இருந்து முதலில் வார்த்தை வரும். வரும் 7-ந் தேதி தனது 40வது பிறந்த நாளை கொண்டாட உள்ள எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரத்து 876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 773 ரன்களையும், 98 ஒருநாள் போட்டிகளில் 1,617 ரன்களையும், 211 ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரத்து 669 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.