தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளார் குப்புராமு துரைபாண்டி, மத்திய அரசின் கயிறு வாரியத்தின் (COIR BOARD) அதிகாரப்பூர்வமற்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட குப்புராமு திமுக வேட்பாளரிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






பாஜக துணைத் தலைவராக பதவி வகித்துள்ள குப்புராமு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1986 முதல் 2006ஆம் ஆண்டு வரை பட்டினம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றத் தலைவராக 3 முறை பதவி வகித்துள்ளார். மேலும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பாஜக தலைவராக குப்புராமு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த நேரத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது, கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல். பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல். தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல். நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல். தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது. தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது. கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது ஆகும்.