சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜேனா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:
தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், வெள்ளி வென்ற கிஷோர் ஜேனாவிற்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இருவரையும் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, “ ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வரலாற்றுச்சிறப்புமிக்க தங்கத்தை வென்றதற்கு பாராட்டுக்கள். அதேபோட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிஷோர் ஜேனாவிற்கும் வாழ்த்துகள். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்களின் அபார திறமைக்கு பதக்கப்பட்டியலே சான்றாகும். வீரர்கள் இதை தக்க வைத்துக் கொள்ளட்டும்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா பதக்க வேட்டை:
இன்று நடடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்த மற்றொரு வீரர் கிஷோர் ஜேனா 87.54 மீட்டர் தொலைவிற்கு வீசினார். இந்த போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா வீசிய முதல் முயற்சி துல்லியமாக அளக்கப்படாதது, கிஷோர் ஜேனா வீசிய இரண்டாவது முயற்சியை தகுதிநீக்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு அதிருப்திகரமான சம்பவங்களும் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக சீன அதிகாரிகள் மீது பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். வரும் 8-ந் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியா பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.
இந்தியா தற்போது வரை 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களை குவித்துள்ளது. சீனா 171 தங்கப்பதக்கம் உள்பட 316 பதக்கங்களையும், ஜப்பான் 37 தங்கம் உள்பட 147 பதக்கங்களையும், கொரியா 33 தங்கப்பதக்கம் உள்பட 148 பதக்கங்களையும் வென்று முதல் 3 இடத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க: Asian Games 2023: நீரஜ் சோப்ராவுக்கு அநீதி? ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்களுக்கு நடந்தது என்ன?
மேலும் படிக்க: Chepauk Stadium: சென்னையில் முதல் போட்டியில் ஆடும் இந்தியா.. சேப்பாக்கம் மைதானத்தை பாக்கலாம் வாங்க!