ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜேனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.


தூரத்தை அளப்பதில் குளறுபடி:


ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தங்கமகன் நீரஜ்சோப்ரா இந்தியாவிற்காக இன்று தங்கம் வென்றார். தங்கப்பதக்கத்தை வென்ற போதிலும், நீரஜ் சோப்ரா தான் ஈட்டி எறிந்ததை முறையாக அளக்கவில்லை என்று அதிருப்தி அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அவர் நடுவர் மற்றும் அங்கிருந்த போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.


நீரஜ் சோப்ரா தான் முதல் முறை வீசியதை முறையாக அளக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். இதனால், மீண்டும் அளக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீரஜ் முதல் முறை வீசிய தொலைவை துல்லியமாக அளக்க முடியவில்லை. இதனால், நீரஜ் சோப்ரா வீசிய தூரம் துல்லியமாக அளக்கப்படாததால் அடுத்த வீரர் வீச முடியவில்லை. இதனால், ஆட்டம் 20 நிமிடம் தாமதம் ஆனது. பின்னர், மீண்டும் நீரஜ் சோப்ரா வீசினார். அவர் தன்னுடைய முதல் முயற்சியில் 82.38 மீட்டர் தூரம் வீசினார்.


கிஷோருக்கும் அநீதி:


நீரஜ்சோப்ராவிற்கு போலவே மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜேனாவிற்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியது. அவரது இரண்டாவது முயற்சியின்போது அவர் ஈட்டியை எறிந்தபோது அவரது கால் வெள்ளைக் கோட்டை தொடவே இல்லை என்று மிக தெளிவாக தெரிந்தது. ஆனால், அங்கிருந்த நடுவர் அவர் வெள்ளைக் கோட்டை தொட்டதாக கூறி அவரது முயற்சியை தகுதிநீக்கம் செய்து சிவப்பு கொடியை உயர்த்தினார். இதனால், கிஷோர் மட்டுமின்றி இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






உடனடியாக நீரஜ் சோப்ரா கிஷோர் ஜேனாவை முறையிடச் சொன்னார். இதையடுத்து, அவர் அப்பீல் செய்ததைத் தொடர்ந்து 79.76 மீட்டர் வீசிய அவரது தொலைவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தங்கம் வென்ற நீரஜ்சோப்ரா பேசியதாவது, என்னுடைய முதல் முயற்சி மிகவும் நன்றாக வந்தது. ஆனால், அவர்கள் அதை பதிவு செய்யவில்லை. நான் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால், என் கையில் எதுவும் இல்லை. என்னால் இதுதொடர்பாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும், நான் தங்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியே எனறார்.


சீனாவில் நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக சீன அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போட்டியின் இறுதியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.  கிஷோர் ஜேனா 87.54 மீட்டர் தொலைவு தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.