சென்னையில் இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, ரோகித் சர்மாவும், டி காக்கும் முதலில் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் துரிதமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக, கடந்த இரு போட்டிகளில் ஜொலிக்காத டிகாக் இந்த முறை நிதானமாகவே ஆட்டத்தை கடைபிடித்தார். மறுமுனையில் தனது வழக்கமான அதிரடியில் ரோகித் சர்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 25 பந்துகளில் 32 ரன்களை குவித்து தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அவர் 6 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 10 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அவரும் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த இரு விக்கெட்டுகள் விழுந்ததால், அடுத்த இறங்கிய இஷான் கிஷன் மற்றும் டி காக் நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 98 ஆக உயர்ந்தபோது 40 ரன்கள் எடுத்திருந்த டி காக் முஜிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர், பொல்லார்ட் களமிறங்கினார். மறுமுனையில் மிவும் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 21 பந்துகளில் 12 ரன்களை சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரன் சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் அவரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் களத்தில் நின்ற பொல்லார்ட் கடைசி கட்டத்தில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 22 பந்துகளில் 35 ரன்களை குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.
ஹைதராபத் அணி தரப்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிவரும் ஹைதராபாத் அணி 3.3 ஓவர்களில் 28 ரன்களை அடித்துள்ளது.