தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய அலுவல்கள் காலை தொடங்கின. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பதிலுரை அளித்து பேசி வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அதில் சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என்றார்.


முக்கிய அறிவிப்பாக மீத்தேன் போராட்ட வழக்குகள் வாபஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமை சட்டம், மீத்தேன் நியூப்ரினோ- கூடங்குளம் திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்தார்.




முன்னதாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த வரவு – செலவு தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே 2ந் தேதி வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு அ.தி.மு.க. அரசே காரணம். பிப்ரவரி 26 முதல் மே 6-ந் தேதி வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு மறந்துவிட்டதா? கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற படத்தின் தலைப்பை சுட்டிக்காட்டி முன்னாள் அ.தி.மு.க. அரசை விமர்சித்தும் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.