உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி கடந்த 18-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுதாம்படன் நகரில் நடைபெற்றது. இதில் 520 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த இந்தியாவும், 420 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியும் மோதின.


இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச்சாதனையை படைத்தது.


அந்த அணிக்கு பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ நல்ல வீரர்கள் எப்போதும் ஆட்டத்தை கடைசியில் முடிக்கமாட்டார்கள்! வாழ்த்துக்கள் நியூசிலாந்து. உலகின் நம்பர் 1 ! “ என்று பாராட்டியுள்ளார்.






மற்றொரு முன்னாள் தொடக்க ஆட்டக்காரரரும், அதிரடி மன்னனுமான வீரேந்திர சேவாக், “ இதே நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஓவர் உலக கோப்பை சாம்பியன் வாய்ப்பை தவறவிட்டனர். ஆனால், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தங்களது வழக்கமான பாணியில் வென்றுள்ளனர். வாழ்த்துக்கள் பல. நிச்சயமாக தகுதிவாய்ந்த சாம்பியன்ஸ்” என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், வெற்றி பெற்ற உற்சாகத்தில் வரும் ராஸ் டெய்ல் மற்றும் கேன் வில்லியம்சன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.






மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.வி.எஸ். லட்சுமணன், “ அருமையான தொழில்முறை வீரர் பி.ஜே. வால்டிங்கிற்கு வாழ்த்துக்கள். அவர் விளையாட்டின் சிறந்த தூதராகவும், வெற்றிகரமான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார்” என்று புகழாரம் சூடியுள்ளார்.






இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரம் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நியூசிலாந்து அணியினர் ஆட்டம் முழுவதும் மேலோங்கியே இருந்தனர். அவர்களது பந்துவீச்சாளர்கள் தனித்திறனுடன் செயல்பட்டனர். குறிப்பாக, கைல் ஜாமிசன். விராட் கோலிக்கு எதிராக நன்றாக பந்துவீசினார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.






இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.சி.சி. வெளியிட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.