மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் இரு பாலருக்கும் மாநில அளவில் நடைபெற்ற 7-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு ஓஎன்ஜிசி கோப்பைக்கான வாலிபால் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியும், ஆடவர் பிரிவில் திருவாரூர் அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர் வெற்றிபெற்ற அணியினருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏக்கள் மேயர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு ஓஎன்ஜிசி கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெற்றது. லீக் சுற்றுகளாக பகல், இரவு ஆட்டமாக மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலர் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து போட்டிகள் நிறைவு பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தலா முறையே 30 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்கள் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் பெண்கள் பிரிவில் மயிலாடுதுறை அணியினரும், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியினரும் முதலிடத்தை பிடித்து ஓஎன்ஜிசி காவேரி கோப்பையை கைப்பற்றினர். வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கும்பகோணம் மேயர் சரவணன் ஆகியோர் ரொக்க பரிசு மற்றும் கோப்பையை வழங்கி பாராட்டினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கண்டு ரசித்தனர்.