அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டித்த எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இன்று அவரை நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 


செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 


இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால் அவரது கைது சரியானது என உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். 


அதன்பின்  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.


இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த  வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி  உத்தரவிட்டிருந்தார்.


ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை இன்று வரை அதாவது 28-ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இன்று செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.