ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி, மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் துப்பாக்கி சுடுதலுக்கு பிறகு இந்திய பதக்கம் வெல்லும் ஒரு விளையாட்டு என்றால் அது பேட்மிண்டன் தான். இந்த விளையாட்டில் ஏற்கெனவே 2012 லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கமும், 2016 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்தச் சூழலில் 2021-ஆம் ஆண்டு நடைபெற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பி.வி.சிந்து ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளார். ஆனால் சாய்னா நேவால் இன்னும் தகுதி பெறவில்லை. 


இந்நிலையில் மலேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது சாய்னா நேவால் மற்றும் கிடம்பி ஶ்ரீகாந்த் ஆகியோரின் ஒலிம்பிக் தகுதி கனவிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஏனென்றால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற இவர்களுக்கு இருந்த இரண்டு தொடர்களில் இதுவும் ஒன்று. இந்தப் போட்டிகள் மலேசியாவில் மே 25-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருந்தது. தற்போது மலேசியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் இப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 


 





எனவே இவர்கள் இருவருக்கும் கடைசி வாய்ப்பாக அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் தொடங்கும் கோலாலம்பூர் ஓபன் தொடர் அமைந்துள்ளது. அந்தப் போட்டிகளிலும் நடைபெறாவிட்டால் இவர்கள் இருவரின் ஒலிம்பிக் கனவும் நிறைவேறுவது கடினமாகும். ஏற்கெனவே இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் செட்டி இணையும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.