முதலமைச்சரின் செயலாளர்களாக நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவிப்பு வெளியானதில் இருந்து உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., உமாநாத் ஐ.ஏ.எஸ்., சண்முகம் ஐ.ஏ.எஸ்., அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., ஆகிய நால்வரும் யார் என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது. உதயச்சந்திரன் குறித்து பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் மற்றவர்கள் குறித்து பெரிய அறிமுகம் இருந்திருக்க வாய்ப்பில்லை.


 


உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். ( Udhayachandran IAS )


நாமக்கல்காரர். மிக நேர்மையான அதிகாரி இவற்றை தாண்டி டெக்னாலஜியை அரசு துறைகளில் கொண்டு வந்தவர். மிக குறைந்த வயதில் ஐ.ஏ.எஸ். ஆன உதயச்சந்திரன், தமிழ் இலக்கியம், கலாச்சாரம் குறித்து அதீத ஆர்வம் கொண்டவர். ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த உதயச்சந்திரன். மாணவர்களுக்கான கல்வி கடனை பெருமளவில் அவர்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஊட்டியதோடு, கடன் கிடைக்கச் செய்தவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடக்காத மதுரையின் 3 கிளர்ச்சி கிராமங்களுக்கு தேர்தல் நடத்தி அசத்தியவர்.


ஆனால் டி.என்.பி.எஸ்.சி செயலாளராக 2011ல் நியமிக்கப்பட்ட பிறகு அவர் செய்த செயல் , இவர்தாண்டா அதிகாரி என அனைவரையும் வியக்க வைத்தது. அரசு வேலைக்காக அல்லல்பட்டு வேதனையோடு பலர் காத்திருக்க காசு வாங்கிக் கொண்டு கை காட்டுபவருக்கு வேலை என்ற நிலை கண்டு கொதித்தார். பின்புதான் அமைப்பின் தலைவரே அந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.




தைரியமாக அனைத்தையும் ஆதாரங்களோடு புகாராக அனுப்பினார். அரண்டு போனார் டி.என்.பி.எஸ்.சி தலைவர். ராஜினாமா செய்ததோடு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆன்லைன் தேர்வு , ஒருமுறை கட்டணம் என அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை செய்து அசத்தினார். பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றப்பட்டார் உதயச்சந்திரன். ஆடிய கால் சும்மா இருக்குமா? அங்கும் அதிரடி மாற்றங்கள். மதிப்பெண் முறை ஒழிக்கப்பட்டது. அவ்வளவுதான் தூக்கியடிக்கப்பட்டார். ஆனால் மக்கள் உதயச்சந்திரனை மீண்டும் கொண்டுவர போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருந்தாலும் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான ஆலோசனைகள் அவரிடம் இருந்து பெறப்பட்டது. தொல்லியல்துறைக்கு அனுப்பப்பட்டாலும் கீழடியை ( Keezhadi )பெரிதாக்க உதயச்சந்திரனின் முயற்சி அளப்பரியது.


 


உமாநாத் ஐ.ஏ.ஏஸ். ( Umanath IAS , TNMSC Chairman) 


 


தமிழ்நாடு மருந்து பொருள் கழகத்தில் தலைவராக உள்ளார் உமாநாத். மிகவும் ஸ்ட்ரிக்டான யாரிடமும் பெரிதாக பேசாத அதிகாரி என்பார்கள் அறிந்தோர். கலைஞர் ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. அதனை கோயம்புத்தூர் ஆட்சியராக இருந்து நடத்திக் கொடுத்தவர். மேலாண்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர் என கலைஞரால் பாராட்டப்பட்டவர். ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் தாண்டி இடஒதுக்கீடு குறித்த நீண்ட புரிதல் உள்ளவர். அதனால் தமிழக அரசும் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான மத்திய குழுவுக்கு இவரை அனுப்பியது. கொரோனா காலத்தில் தேவையான மருந்துகளை முன்கூட்டியே திட்டமிட்டு வாங்கியது, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கொள்கலன்களை உயர்த்தியது என பல விஷயங்களை செய்தார். அமைச்சர் ஒருவரின் தலையீட்டை லாவகமாக தவிர்த்து மருந்து பொருள் கழகத்தை காத்தவர். உமாநாத் போன்ற அதிகாரி இல்லாவிட்டால் மருந்து கழகம் முழுக்கவே விற்கப்பட்டு அந்த கழகமே ( Corona Drug TNMSC ) காணாமல் போயிருக்கும் என மூத்த பத்திரிகையாளர்கள் சொல்வார்கள். 




கடந்த ஆட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் நடந்த முக்கிய விஷயங்கள், குறைக்கப்பட்ட TNMSC அதிகாரம், அரசு மருத்துவமனை டீன்கள் செய்த மருந்து கொள்முதல் போன்றவை குறித்தெல்லாம் இவரிடம் தகவல் உள்ளதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செக் வைக்க இவர் பயன்படலாம். மேலும் கொரோனா பணிகளில் இவரை பயன்படுத்தவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.


 


சண்முகம் ( MS Shanmugam IAS )


பாரத் நெட் டெண்டர் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனை எப்படியாவது நடத்திவிட துடித்த தமிழக அமைச்சர்களுக்கு முறைகேடுகளை சுட்டிக் காட்டி தடுத்தவர் சந்தோஷ்பாபு. கடைசியில் விருப்ப ஓய்வு வாங்கிச் சென்று விட்டார். அவருக்கு பின் அந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய அதிகாரம் சென்றது சண்முகம் ஐ.ஏ.எஸ். கைக்கு. ஆனால் ( Bharat Net Tender )  அந்த ஒட்டுமொத்த ஏல முறையே தவறு என்று அதற்கு அனுமதி மறுத்தார் சண்முகம். அவரும் பந்தாடப்பட்டார். மிக நேர்மையான அதிகாரி. தஞ்சாவூர் ஆட்சியராக இருந்தவர். கலைஞர் ஆட்சிக் காலத்தில் முதல்வரின் பிரிவில் பணியாற்றியவர். 


 


அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். ( Anu George IAS )


அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ். என்றாலே அரியலூர் மக்கள் கொண்டாடுவார்கள் குறிப்பாக அங்கன்வாடி பணியாளர்கள். 2019ம் ஆண்டு தமிழகம் முழுக்க பணத்தை வாங்கிக் கொண்டு இவர்களுக்குதான் பணி என அரசியல்வாதிகள் மிரட்டினர். வேறு வழியின்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பணிய வேண்டிய நிர்பந்தம். ஆனால் ஒரு ஆறு பேர் மட்டும் அதனை சட்டை கூட செய்யவில்லை.




நீங்க சொல்றபடிதான் அங்கன்வாடி நியமனம் என அரசியல்வாதிகளிடம் இரவு சொல்லிவிட்டு அடுத்த நாள் காலை தகுதி யாருக்கு உண்டோ அவர்களுக்கு பணி என சொல்லி அப்பாயிண்மெண்ட் ஆர்டர் வெளியானது. ஆடிப்போனர் பலர். கோபம் கொண்டனர் சிலர். யாரந்த ஆறு மாவட்ட ஆட்சியர்கள் என லிஸ்ட் ரெடியாக, தனது வீட்டை காலி செய்து காத்திருந்தார் அனு ஜார்ஜ். ஆம், அரியலூர் ஆட்சியராக இருந்த அனு ஜார்ஜ்தான் இப்போது முதல்வரின் செயலாளர். அது மட்டுமல்ல, ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்து பல உதவி கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து வழக்கு போட்டு அதிரடி காட்டியவர். அதிரடி காட்ட காட்ட, அரசும் இத்துணை நேர்மை ஆகாது என்று அடித்தது ட்ரான்ஸ்பர்.