ஃபாதர் ஆப் இந்தியன் ஸ்போர்ட்ஸ், ஹாக்கியின் மந்திரவாதி என்று அழைக்கப்படும் இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினம் இன்று. கடந்த 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற வீரர் தயான்சந்த் பற்றி முழு விவரங்களை கீழே காணலாம். 


ஹாக்கி போட்டியில் கோல் அடிக்கும் அற்புதமான கலைக்கு பெயர் பெற்ற தயான்சந்தின் ஹாக்கி பயணம் ராணுவத்தில் இருந்து தொடங்கியது. 


யார் இந்த தயான்சந்த்..? 


தயான்சந்த் தனது 16வது வயதில் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக சேர்ந்தார். அப்போது அங்கு ஹாக்கி விளையாடுவதை பார்த்த தயான்சந்த் முதன்முதலாக ஹாக்கி விளையாட்டை விளையாட தொடங்கினார். தயான்சந்தின் உண்மையான பெயர் தயான் சிங், இவர் ராணுவ பணிக்கு பிறகு நிலவின் வெளிச்சத்தில் இரவில் ஹாக்கி பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு இவருக்கு சந்த் என்று அடைமொழியாக மாறவே பின்னர் அவரது பெயர் தயான் சந்த் ஆனது. தயான்சந்த் 1922 முதல் 1926 வரை ராணுவத்தில் இருந்து ரெஜிமென்ட் போட்டிகளில் விளையாடி அனைவரையும் கவர்ந்தார். 






இதனை தொடர்ந்து, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இராணுவ அணியில் தயான்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய ராணுவ அணி 18 ஆட்டங்களில் வெற்றி, 2 டிரா மற்றும் ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. இந்தச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, தயான்சந்த் பெயர் உலகளவில் பிரபலமாகி, புதியதோர் அங்கீகாரம் கிடைத்தது. இப்படியே மெல்ல மெல்ல அவரது ஹாக்கி பயணம் ஏழு கடல் ஏழு மலை என புகழ் முன்னேற ஆரம்பித்தது. 


ஹிட்லரே அழைத்த பெருமை: 


1936 ஒலிம்பிக்கில் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஜெர்மனியின் இந்த தோல்வியை ஹிட்லர் பொறுத்துக் கொள்ளாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்தப் போட்டியில் தயான்சந்த் மட்டும் மூன்று கோல்கள் அடித்தார். தயான்சந்தின் சிறப்பான ஆட்டத்தைப் பார்த்த ஹிட்லர், ஹாக்கியைத் தவிர நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று போட்டி முடிந்ததும் அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த தயான்சந்த், ”நான் ஒரு இந்திய ராணுவ வீரர்” என்று கர்வமாக சொன்னார். இதற்குப் பிறகு, ஹிட்லர் அவரை ஜெர்மன் இராணுவத்தில் சேர முன்வந்தார். அதை ஏற்கமறுத்த தயான்சந்த் ஹிட்லர் கொடுத்த அரிய வாய்ப்பை நிராகரித்தார். 


மேஜர் தயான்சந்த் 1928, 1932 மற்றும் 1936 இல் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாடினார். அந்த மூன்று முறையும் இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், விளையாட்டுத் துறையில் அவரது பெயரில் 'மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது' என்ற விருதும் வழங்கப்படுகிறது. முன்னதாக. இந்த கேல் ரத்னா விருது 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது' என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.