மலையாளம் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம் ஆகும். வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி மன்னனை அழித்ததும், அந்த மகாபலி மன்னன் வருடத்திற்கு ஒருநாள் அதாவது ஆவணி திருவோண தினத்தில் தனது மக்களை பார்க்க வருவதுமே ஓணம் பண்டிகை ஆகும்.


ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் 10 நாட்கள் கொண்டாடுகின்றனர். அதாவது, 20-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை என 10 நாட்கள் திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் மிகப்பெரிய திருவிழாவான திருவோண நட்சத்திரத்தில் வரும் திருவோண பண்டிகை நாள் வரும் 29-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை மலையாள மக்கள் அனைவரும் திருவோணப்பண்டிகையை குடும்பத்தினருடன் பூக்கோலம் போட்டி, சத்யா உடன் கொண்டாடுவார்கள்.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து:


”மக்களை மகிழ்ச்சியாக வாழ வைத்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடும், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்னன் மகாபலியின் வாழ்க்கை மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு ஆகும். இன்றுள்ள கேரளத்தை முன்னொரு காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வந்த மகாபலி, கொடை வள்ளலாகவும் விளங்கினார். மகாபாரத்தில் கர்ணனின் கொடைவள்ளல் குணத்தைப் பயன்படுத்தி அவரது உயிர் எப்படி நயவஞ்சகமாக பறிக்கப்பட்டதோ, அதேபோல்தான் மகாபலியியின் உயிரும் பறிக்கப்பட்டது.


தமிழ் பண்பாட்டிற்கும், ஓணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கியத்திலும் இது தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன.  அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ வேண்டும் என்பது தான் ஓணம் திருநாள் மக்களுக்கு  சொல்லும் செய்தி. அந்த செய்தியை மதித்து, ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாட்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும்” என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.


பா.ம.க நிறுவனர் ராமதாசு வாழ்த்து:


”மக்களையே தமது சொத்தாக மதித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அது நிறைவேறும் வகையில் துன்பங்கள் விலகி இன்பங்கள் நிறையவும், மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைக்கவும்  ஓணம் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.  


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: 


”திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


மகாபலிச் சக்ரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.


பசி, பிணி, பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும்; ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இந்த ஓணம் பண்டிகை உணர்த்துகிறது. இந்த இனிய திருநாளில் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.