முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 02.09.2023 சனிக்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் (VISTAS – வேல்ஸ் பல்கலைகழக வளாகம் அருகில்) செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திட உள்ளது.
200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
வயது வரம்பு என்ன ?
வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 02.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாமிற்கு முன்பதிவு செய்வது எப்படி ?
மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மற்றும் https://forms.gle/9Uts84HsjpNydng97 என்ற கூகுல் லிங்க்கில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.