மீண்டும் ஓர் விபத்து, உலகின் தலைசிறந்த கார் பந்தயமான ஃபார்முலா 1 பந்தயத்தில் நிகழ்ந்திருப்பது உலகெங்கிலும் உள்ள ஃபார்முலா1 ரசிகர்கள் மத்தியிலும், பந்தய அணிகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஜோ கொன்யூ (Zhou Guanyu) ஆல்ஃபா ரோமியோ (Alfa Romeo) அணிக்காக பங்கேற்ற போட்டியானது இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள்ளாக சீனாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய வீரரின் காரின் மீது மற்றொரு கார் மோத, அதீத வேகத்தில் செல்லத் துவங்கிய கார் தலைகீழாக கவிழ்ந்து ஓடுதளத்திலிருந்து சுற்றுச்சுவரைத் தாண்டி பார்வையாளர் மாடத்திற்கு கீழுள்ள சுவற்றில் மோதிய கார், சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தால் மொத்த பந்தயக்களமும் ஸ்தம்பித்து, பிறகு சிவப்புக் கொடி காட்டப்பட்டு பந்தயம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜோ கொன்யூ நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுமின்றி உயிர் பிழைத்ததோடு தான் அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரிய பந்தயத்திற்கு தயாராக இருப்பதாகச் சொல்லியுள்ளார்.
பெரும்விபத்துகளும் மரணங்களும்
அட்ரினலின் சுரப்பை பார்வையாளர்களுக்கு கூட்டும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் கார்களில் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எண்ணற்ற பாதுகாப்பு மாற்றங்களை கொடுத்திருந்தாலும் நிகழும் சிறு மாற்றமும் பெரும் விபத்துகளை ஏற்படுத்திவிடக் கூடிய வேகம் கொண்டது ஃபார்முலா 1. அவ்வாறாக நிகழ்ந்த பெரும் கவனம் பெற்ற விபத்துகள் உலகை திரும்பிப் பார்க்க செய்தன.
1955 – மொனாகோ கிராண்ட் ப்ரிக்ஸ்
அப்படியான விபத்துகளின் துவக்கமாக 1955-ல் நடைபெற்ற மொனாகோ கிராண்ட் ப்ரிக்ஸ்-ல் இரண்டு முறை உலகச் சாம்பியனான அல்பெர்டோ அஸ்காரி (Alberto Ascari) இரண்டாவது வரிசையில் போட்டியை துவங்கி முதல் இடத்துக்காக போட்டியில் இரண்டு கார்களுடன் போட்டியில் இருந்தார். அவற்றில் ஒரு கார் இயந்திரக் கோளாறு காரணமாக விலக மற்றொரு காரும் இயந்திரக் கோளாரால் வேகம் குறைய அதனை முன்னேறிய அஸ்காரியின் கார் சட்டெனெ தடுப்பரணை தாண்டி மெடிடேரியன் கடலுக்குள் பாய்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கார் தண்ணீருக்குள் மூழ்கி விட அதிசயமாக சட்டென அஸ்காரி தண்ணீருக்குள்ளாக இருந்து வெளியே வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. மூக்கு உடைபட்டு சில நாட்களில் நலம் பெற்ற அஸ்காரி சில நாட்களுக்கு பின்னர் நடந்த கார் சோதனை பயிற்சியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
1961 – இத்தாலியன் கிராண்ட் ப்ரிக்ஸ்
1961-ல் இத்தாலியில் மோன்ஸா பந்தய களத்தில் நடந்த போட்டியில் உல்ஃப் கேங் வான் ட்ரிப்ஸ் உலகச் சாம்பியனுக்கான போட்டியில் தீவிரமாக மற்ற வீரர்களுடன் போட்டியிலிருந்தார். முதலிடத்தினை நோக்கி அதிவேகமாக செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேலையில் களத்தினை ஒட்டியிருந்த சற்று மேடான பகுதியில் யாரும் எதிர்பாராத விதமாக மற்றொரு காருடன் இடித்ததின் விளைவாக கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டு பந்தயத்தினை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மீது மோதியது. சிதறிய மக்கள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 15 பேர் பலியாகினர். காரினுள் இருந்து தூக்கி வீசப்பட்ட உல்ஃப் கேங்-ம் இவ்விபத்தில் பலியானார்.
1976 – இத்தாலியப் கிராண்ட் ப்ரிக்ஸ்
மழையின் காரணமாக போட்டியை நிறுத்துவதற்காக ஓட்டளித்தவர்களில் ஒருவர் நிக்கி லடா (Nikki Lauda). ஆனால் பந்தய ஓட்டுநர்களில் அதிகமானோர் பந்தயம் நடக்க வேண்டி ஓட்டளித்ததால் பந்தயம் நடத்தப்பட்டது. அவ்வாறாக நடந்த பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் ஒரு வளைவில் திரும்புகையில் இடையே இருந்த சுவற்றில் மோதிய வேகத்தில் நிக்கியின் கார் தீப்பற்றி எறிய துவங்கியது. ஆனால் நிக்கியால் காரில் இருந்து தன்னிச்சையாக வெளியேற முடியாமல் திணறலுடன் வெளியேற போராடினார். அப்போது மற்ற கார் பந்தய வீரர்கள் உதவியுடன் பலத்த தீக்காயத்துடன் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிக்கி, சுயநினைவை இழந்தார். அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த நிக்கி லாடா, பின்னர் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு முறை உலகச் சாம்பியன் ஆனார்.
1978 – இத்தாலியன் கிராண்ட் ப்ரிக்ஸ்
ரொன்னி பீட்டர்சன் 1978 இத்தாலியன் கிராண்ட் ப்ரிக்ஸில் ஓட்டிய கார் மற்ற கார்களைவிட பழைய கார் எனினும் அவர் பந்தயத்தில் தீரமாக வாகனத்தை இயக்கி வெற்றி வாகை சூடும் எண்ணத்தில் பந்தயக்களத்தில் இருந்த போது, அவரது காருக்கு பின்னால் வந்த கார் அவரது காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. தீ பற்றி எறியத் துவங்கிய காரிலிருந்து மீட்கப்பட்ட ரொன்னியின் கால்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவு ஏற்பட்டது. நலமோடு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் உடல்நலனில் திடீரென ஏற்பட்ட பின்னடைவினால், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
1994 – சான் மரினோ கிராண்ட் ப்ரிக்ஸ்
சான் மரினோவில் நடந்த 1994 கிராண்ட் ப்ரிக்ஸ்-ல் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துகள் ஃபார்முலா 1 பந்தயத்தின் வரலாற்றில் கருபுள்ளியாக அமைந்துவிட்டது. முதல் விபத்து ரோலண்ட் ரட்ஜன்பர்சர் பந்தயத்திற்கு முன்னதாக நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டியில் நிகழ்ந்தது. ரோலண்டின் கார் ஓரிடத்தின் திருப்பத்தில் கட்டுப்பாட்டினை இழந்து பேரியர் மீது படுவேகமாக மோதியதில் தலையில் பலத்த காயமுற்று நிகழ்விடத்திலேயே ரோலண்ட் உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து பந்தயம் நிறுத்தப்படலாம் என்ற கருத்து நிலவிய நிலையில் பந்தய நாளில் போட்டி எந்த தடையும் இன்றி நடைபெற்றது. ஃபார்முலா 1 பந்தயத்தில் அந்த காலகட்டத்தின் சூப்பர் ஸ்டாராக பார்க்கபட்ட சென்னாவிற்கும் பின்னர் பலமுறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற மைக்கேல் ஷூமாக்கருக்கும் நடந்த கடுமையான போட்டியில் சென்னா ஷூமாக்கரை முந்துவதற்கான முயற்சியின் போது எதிர்பாராத வண்ணம் படுவேகமாக சுற்றுச் சுவற்றின் மீது சென்னாவின் கார் மோதியது. சென்னாவின் கார் மோதிய வேகத்தில் அவரது காரின் ஒரு சக்கரம் அவர் மீது கடுமையாக மோதி பலத்தக் காயத்தையும் கடுமையான இரத்த இழப்பையும் உண்டாக்கியது. இவ்விபத்தில் சென்னாவின் மரணம் உலகின் கார் பந்தய ரசிகர்களை அதிரச் செய்தது. சென்னாவின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் விபத்து நடந்தால் அதிலிருந்து பாதுகாக்கும் வகையிலான தொழிநுட்ப முறைகளை புகுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகும் சில பெரும் விபத்துகள் நிகழ்ந்தாலும் அதிலிருந்து மீண்டு பந்தய கார் ஓட்டுனர்களும் அதிபர்களும் மென்மேலும் ஃபார்முலா 1-ன் கட்டமைப்புகளில் மாற்றங்களை புதிய புதிய உத்திகளையும் கையாண்டு ஃபார்முலா 1-ன் வீறுநடை சறுக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
உயிருக்கு உத்திரவாதமில்லாத சூழல் இருந்தாலும் அவ்விளையாட்டின் மீதான அதீத ஆர்வம் மிக்க தீரம்மிகு பந்தயவீரர்களின் செயல் ஃபார்முலா 1-ஐ உலகின் தலைசிறந்த பந்தய விளையாட்டாக இன்றும் என்றும் நிலைக்கச் செய்யும் என்பதில் மாற்றில்லை.