வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் வாழையுடன் வாழ்க்கை என்று வலிமையாக வாழை சாகுபடி செய்து ஆலமரம் போல் அழுத்தமாக நிற்கிறார் திருவையாறு அருகே வடுகக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி மதியழகன் (50). வாழையில் வீண் என்று எதுவுமில்லை. சரியானபடி சாகுபடியையும், விற்பனையையும் செய்தால் செம லாபம்தான் என்கிறார் ஆணித்தரமாக.



தீக்காயம் பட்டவர்களை வாழையிலையில் படுக்க வைத்து மேலாக ஒரு வாழையிலையை போர்த்துவார்கள். இது காயத்தின் வெப்பத்தை தணித்து குளிர்வுபடுத்தும். இப்படி உயிரை காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் வாழை என்று பெயர் வந்தது என்று கூறுவார்கள். வாழையை போல் வாழ வைக்கவும் முடியாது...அழிக்கவும் முடியாது என்றும் கூறுவார்கள். இயற்கையின் பேரிடர்களை தாங்கும் சக்தி வாழைக்கு கிடையாது. பெரும் காற்றோ, அதிக மழையோ எளிதாக வாழையை முறித்துவிடும்.

இப்படிப்பட்ட வாழைதான் என் வாழ்க்கை என்று வாழையை மட்டும் பயிரிட்டு அதிலிருந்து சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வடுகக்குடி கிராமத்தை சேர்ந்த வாழை விவசாயி மதியழகன் (50). இவரது மனைவி கவிதா. பாரதி, ஐஸ்வர்யா, நிவேதா. மூவரும் இளங்கலை பட்டதாரிகள். இதில் பாரதிக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். வாழையில் கிடைத்த வருமானம்தான் என் மகளுக்கு அருமையான வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடிந்தது என்கிறார் மதியழகன். இவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவரை முதலாளியாக உயர்த்தியுள்ளது வாழை. வாழ்க்கை கொடுத்த வாழையை மறவாமல் கடந்த 25 ஆண்டுகளாக வாழை சாகுபடி மட்டுமே செய்து வருகிறார். இவர் சாகுபடி செய்வது பூவன் ரக வாழை மட்டும் தான்.

வடுகக்குடி, மருவூர், சாத்தனூர் என்று இவர் வாழை சாகுபடி செய்வது 50 ஏக்கரில் என்றால் அசந்துதான் போக வேண்டும். சென்னை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருச்சி என்று தினமும் 30 ஆயிரம் இலைகளை ஏற்றுமதி செய்கிறார். காலை 7 மணிக்கும் தொடங்கும் இவரது பணிகள் முடிய மறுநாள் அதிகாலை 1 மணி ஆகி விடுகிறது. இலைகளை சரியான அளவில் நுனி இலை, சாப்பாட்டு இலை, டிபன் இலை என்று தனித்தனியாக நறுக்கி, அடுக்கி கட்டி வாகனங்களில் ஏற்றி அனுப்புகிறார்.

இவரையும், இவர் செய்யும் வாழை விவசாயத்தையும் நம்பி 30 குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர். நான் முதலாளி அல்ல தொழிலாளிதான். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் இவர்கள் தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். தொழிலாளர்களை சரியான முறையில் அரவணைத்து சென்றால் எந்த தொழிலும் லாபமான தொழிலாக அமையும் என்கிறார். குடும்பம், குடும்பமாக இவரிடம் பணியாற்றுகின்றனர். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஒரே சம்பளம்தான் அளிக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இவரிடம் வேலை பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1000 முதல் ரூ.1200 வரை சம்பளம் பெறுகின்றனர். இவர் தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் 10 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். குடும்ப விசேஷங்களுக்கு அவர்கள் எதிர்ப்பார்க்காத அளவிற்கு உதவிகள் செய்துள்ளார்.

வாழையில் எதுவும் வீண் இல்லை. இலைக்கு பின் வாழைப்பூ, அதற்கு பின் வாழைத்தார் தொடர்ந்து வாழைத்தண்டு எடுத்தால் கடைசியாக பூ நார் என அனைத்தும் விலையாகும். வாழைத்தாரை திருச்சி, கேரளாவுக்கு ஏற்றுமதி செய்கிறேன். வாழை சாகுபடியில் களை எடுக்க என்று 10 பெண்கள் நிரந்தரமாக பணி செய்கின்றனர். ஒரு வாழை மரத்தில் மாதத்திற்கு 4 முறை இலைகள் அறுவடை செய்யலாம். 10 ஏக்கரில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இலைகள். ஒரு இடத்தில் அறுவடை செய்தால் மறுநாள் அடுத்த இடம், மறுநாள் அதற்கு அடுத்த இடம். இப்படி தொடர்ந்து அறுவடை செய்யப்படுகிறது. அனைத்து செலவுகளும் போக சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 முதல் 5 ஆயிரம் லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வருமானம் கிடைக்கிறது.

கடந்தாண்டு பெய்த கனமழையின் போது வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. வீழ வைப்பதும் இதுதான்... வாழ வைப்பதும் வாழைதான். அதனால் வேறு எந்த சாகுபடியும் செய்ய விருப்பமில்லை. எப்போதும் வாழையோடுதான் என் வாழ்க்கை. தொலை தூரங்களுக்கு அனுப்பப்படும் வாழைக்கட்டுகள் சரியான நேரத்தில் வியாபாரிகளை சென்றடைந்து விடும். தொழிலில் கறார் ஆகவும், நேரத்திற்கு கிடைப்பது போல் அனுப்பவும் செய்ய வேண்டும். இங்கிருந்து வேன் மற்றும் பஸ்களில் இலை கட்டுக்கள் அனுப்பப்படுகிறது. நம்மை வாழை வாழ வைக்கும் என்ற திடமான நம்பிக்கை இருந்தால் எக்காலத்திலும் வீழ மாட்டோம். கொரோனா காலத்திற்கு பின்னர் வாழை இலையின் மகத்துவம் அறிந்து அனைத்து பகுதிகளிலும் இன்றைய இளைய தலைமுறையினர் வாழை இலையை  பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் விற்பனை வாய்ப்புகளும் அதிகம் உள்ளது. எவ்வித இடைத்தரகர்கள் தலையீடும் இன்றி நேரடியாக விற்பனை செய்து வருகிறேன் என்றார். வாழை சாகுபடி அள்ளித் தரும் அட்சயப்பாத்திரம். அதை சரியான முறையில் செய்தால் லாபம்தான்.

கொரோனாவால் பாதித்து சிகிச்சைப் பெற்று உயிர் பிழைத்த இவர் கடந்த 2020-2021ம் ஆண்டுகளில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர்களுக்காக தன் தோட்டத்தில் விளைந்த இரண்டரை டன் வாழைப்பழங்களை இலவசமாக கொடுத்து பாராட்டுக்களை குவித்துள்ளார்.

கடுவெளியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு வாரத்திற்கு இருமுறை வாழைத்தண்டு, வாழைப்பூக்களை இலவசமாக கொடுத்து வருகிறார். அதிக ஆன்மீக நாட்டம் கொண்ட இவர் தோட்டக்கலைத்துறை சார்பில் வாழை சாகுபடியின் பயன்கள் குறித்து பிற மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சியும், ஊக்கமும் அளித்துள்ளார். நாகர்கோவில், ராமநாதபுரம், தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று வாழை சாகுபடி குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு சிறந்த வாழை உற்பத்தியாளர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார் மதியழகன். தஞ்சை மாவட்டம் வாழை உற்பத்தியாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.