மதுரையில் நடைபெற உள்ள 14 வது ஹாக்கி ஜூனியர் போட்டியில் பங்கேற்க மதுரை விமான நிலையத்திற்கு வந்த அயர்லாந்து அணிக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹாக்கி போட்டி 2025
14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் 05.11.2025 அன்று அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 10.11.2025 அன்று சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தி, உலக கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து வழியனுப்பியது குறிப்பிடதக்கது.
தப்பாட்டம் ஒயிலாட்டம் வரவேற்பு
இந்நிலையில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இதில் பங்கேற்பதற்காக அயர்லாந்து நாட்டிலிருந்து ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மதுரை விமான நிலையம் வருகை தந்துள்ளனர். மதுரை விமான நிலைய வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயின், விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து தமிழக பாரம்பரிய முறைப்படி தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் , மேளதாளங்களுடன் அயர்லாந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்படுத்தப்பட்டது. மதுரை விமான நிலைய வளாகத்தில் அயர்லாந்து ஹாக்கி வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் தமிழர்களின் பாரம்பரிய வரவேற்பை கண்டு வியந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஹாக்கி வீரர்களுக்கான பிரத்யேக பேருந்தில் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்கும் துணை முதல்வர்
தொடர்ந்து இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கூறுகையில்...,” 14வது ஆண்கள் ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் மதுரை வருகை தந்துள்ளனர் அவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஹாக்கி புதிய மைதானத்தை தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் மாலை திறக்கப்படவுள்ளது. வெளிநாடு ஹாக்கி வீரர்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு மதுரை மாநகர் காவல் ஆணையாளர் தீவிர படுத்திருக்கிறார். என்றார்.
தென் மாவட்டத்தில் ஹாக்கி மைதானம்
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி மைதானத்தையும் திறந்து வைக்கிறார். தென்மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு இந்த மைதானம் வரப்பிரசதாமாக அமையும் என ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.