1008 லிங்கங்கள் கூடிய, 210 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 33 அடி உயர சகஸ்ரலிங்கம் மாமல்லபுரம் அருகில் வடிவமைப்பட்டு சிற்பக் கலைஞர் சாதனை படைத்துள்ளார்.
1008 லிங்கங்கள் கூடிய சகஸ்ரலிங்கம் சிலை
1008 லிங்கங்கள் கூடிய, 210 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 33 அடி உயர சகஸ்ரலிங்கம் மாமல்லபுரம் அருகில் வடிவத்து சாதனை படைக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட சகஸ்ரலிங்கம் பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியை சேர்ந்தவர், சி.லோகநாதன்; ஸ்தபதி (வயது65). 45 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த சிற்பக்கலைஞரான இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக்கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்பி ஆவார். இவரிடம் பீகார் மாநிலம், பாட்னா நகருக்கு அருகில் உள்ள கிழக்கு சம்பாரண் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக 1008 லிங்கங்களுடன் கூடிய 33 அடி உயர சகஸ்ரலிங்கம் கருங்கலில் வடிவமைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து 210 டன் கருங்கல் கொண்டு வரப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சகஸ்ரலிங்கம் வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 3 ஆண்டுகளில் ஸ்தபதி சி.லோகநாதன் தலைமையில், இரவு, பகலாக 30 சிற்பிகளை கொண்டு 100 சதவித பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
லிங்கத்தின் சிறப்பம்சங்கள் என்ன ?
33 அடி உயரத்தில் அழகுர காட்சி அளிக்கும் சகஸ்ரலிங்கத்தில் மேல்புறத்தில் 72 லிங்கங்கள் வீதம், 14 அடுக்குகளில் 1008 சிறிய லிங்கங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகத்திலேயே 210 டன் கல்லில் 33 அடி உயரத்தில் 1008 லிங்கங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிக பிரம்மாண்டமாக சகஸ்ரலிங்கம் இதுவே ஆகும்.
இன்று இந்த பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கம் முறையான வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு, ராட்சத கிரேன்கள் உதவியுடன் 130 டயர் கொண்ட ராட்சத டிரைலர் லாரியில் பீகார் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சகஸ்ரலிங்கம் 120 டன் எடை என்பதால் மத்திய அரசின் உரிய அனுமதியுடன் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக இரவு நேரத்தில் மட்டும் பயணம் செய்து இந்த பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கம் ஒரு மாத பயணத்திற்கு பின் டிசம்பர் மாத இறுதியில் பீகார் சென்றடைய உள்ளது.
ஆயிரம் லிங்கங்களை தரிசித்த பலன்!
பின்னர் ஜனவரியில் இந்த சகஸ்ரலிங்கம் அங்கு நிலை நிறுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3 அடுக்குகளை கொண்ட வீராட் ராமாயண் மந்திர் கோயில் கட்டப்பட உள்ளது. பல மாநிலங்கள் வழியாக பயணம் செய்யப்பட்ட இந்த சகஸ்ரலிங்கத்தை வழி நெடுகிலும் பக்தர்கள் ஆங்காங்கே வழிபாடு செய்ய உள்ளனர். மேலும் சகஸ்ரலிங்கத்தை வழிபட்டால் ஆயிரம் லிங்கங்களை வழிபட்ட பலனை ஒரே நேரத்தில் பெறலாம் என இந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
33 அடி உயரத்தில் 1008 லிங்கங்களுடன் கூடிய பீகாரில் அமைய உள்ள சகஸ்ரலிங்கமே உலகத்திலேயே மிக பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கம் என்றும் உலகத்தில் இதுபோன்ற பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கம் இதுவரை எங்கும் அமைக்கப்படவில்லை என்று மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் சி.லோகநாதன் ஸ்தபதி தெரிவித்துள்ளார். சிற்பக்கலைக்கு சிறப்புமிக்க மகாபலிபுரத்தில், பல்வேறு சிற்பக் கலைஞர்கள் இதுபோன்ற சிறப்புமிக்க சிற்பங்களை வடிவமைக்க உலக அளவில் கவனத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.