2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.


இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்டு 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.






அந்த வரிசையில், சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நட்ராஜ் ஆகியோரைத் தொடர்ந்து மானா படேல், நீச்சல் விளையாட்டில் பங்கேற்க தேர்ச்சி பெற்றுள்ளார். பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீராங்கனையான மானா படேல், ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 


21 வயதான மானா படேல், தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில், 50 பேக்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ பேக்ஸ்ட்ரோக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.



2015-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் தொடருக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து, தேசிய அளவிலான 72வது சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். குஜராத்தைச் சேர்ந்த மானா படேல், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் முறையாக பயிற்சி பெற்று வருபவர். ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் தகுதி பெற்றுள்ளார்.






அதை தொடர்ந்து தற்போது 100 பேக்ஸ்டோர்க் பிரிவில் ஸ்ரீஹரி நட்ராஜ் தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு இந்திய நீச்சல் வீரர்கள் தகுதி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இந்த மூன்று நீச்சல் வீரர்களும் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தருவார்கள் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. 


Tokyo Olympics 2021: ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர்கள் - விவரம்!