வாழ்க்கையில் உயரங்களை தொட உயரம் தடை இல்லை என்பதற்கு வாழும் உதாரணம் ஆர்த்தி தோக்ரா ஐஏஎஸ். 3.2 அடி உயரம் மட்டுமே கொண்ட ஐஏஎஸ் ஆர்த்தி தோக்ரா உத்ரகண்ட் மாநிலம் டேராடூனில் 1979ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது தாயார் பள்ளி முதல்வராக இருந்தவர். ஆர்த்தி பிறந்து வளரத் தொடங்கும்போதே வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டார். ஆர்த்தியால் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க முடியாது என மருத்துவர்களும் ஆர்த்தியின் பெற்றோர்களுக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் டேராடூன் வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் தனது மேல்நிலை கல்வியை முடித்த ஆர்த்தி, டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் முடித்தார். மீண்டும் தனது முதுகலை படிப்பிற்காக டேராடூனுக்கு வந்த ஆர்த்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியான மனிஷாவை சந்தித்தார். அவருடனான சந்திப்பு தனது வாழ்க்கை நோக்கிய பயணத்தில் தீர்க்கமான முடிவெடுப்பதற்கு காரணமாக அமைந்ததாக பின்னாளில் ஆர்த்தி தோக்ரா கூறியுள்ளார்.


நீங்கள் ஏன்? சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முயற்சிக்க கூடாது? ஐ.ஏ.எஸ் அதிகாரியான மனிஷாவின் என்ற கேள்விதான் தான் ஐஏஎஸ் ஆக காரணமாக இருந்ததாக கூறும் ஆர்த்தி தோக்ரா, தான் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும்போது அதிகாரிக்கே உரிய கம்பீரம், தோரணை குறித்தெல்லாம் கவலைப்படாமல் 2006ஆம் ஆண்டில் முதல் முறையாக யுபிஎஸ்சி தேர்வெழுதிய ஆர்த்தி தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக செயல்பட்டுவரும் ஆர்த்தி, தான் பணி செய்யும் இடங்களிலெல்லாம் தனி முத்திரையை பதித்து வருகிறார். ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டில் அஜ்மீர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றபோது இந்தியாவிலேயே பொதுவெளியில் மலம் கழிக்கும் மாவட்டமாக அஜ்மீர் மாவட்டம் இருந்தது.



திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெண்களுக்கான பிரச்னைகள் குறித்தும் வீடுவீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கிய ஆர்த்தி தோக்ரா, அரசு அதிகாரிகளும் இந்த விழிப்புணர்வில் பங்கேற்பதை உறுதி செய்தார். திறந்த வெளியில் மலம் கழிக்கும் 219 கிராமங்களை கண்டறிந்து புக்கா டாய்லெட் எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சிமெண்ட் உடன் சேர்ந்து  உருவாக்கப்பட்ட டாய்லெட்டுகள் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டன. மேலும் கிராம மக்கள் கழிவறை கட்டுவதற்காக தங்குதடையின்றி நிதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அஜ்மீர் மாவட்டத்தில் குடிசைப்பகுதியில் வசிக்கும் குடும்பத்திற்கும் கூட புக்கா டாய்லெட் கிடைத்தது. மேலும் வட இந்திய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசு பிரதிநிதிகளும் புக்கா டாய்லெட் திட்டத்தை பார்த்து தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த தொடங்கினர். தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கூட புக்கா டாய்லெட் திட்டம் குறித்து தெரிந்து கொள்வதற்காக அஜ்மீர் மாவட்டத்திற்கு வரத்தொடங்கினர். இதன்மூலம் ஆர்த்தி தோக்ரா இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் கவனிக்கப்பட தொடங்கினார்.



தோக்ரா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலின்போது அஜ்மீரில் மாவட்ட தேர்தல் ஆணையராக பணியாற்றினார். பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு சிரமமின்றி வந்து வாக்களிக்கும் வகையில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் இரண்டு சக்கர நாற்காலிகள் விதம் 824 சக்கர நாற்காலிகளை ஒதுக்கி மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கே வந்து வாக்களிக்கும்படி செய்தார். இதனால் 17ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கே வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து சென்றனர். இவரின் சிறப்பான பணியை பாராட்டு வகையில்  கடந்த 2019-ம் ஆண்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரிடம் தேசிய விருதினையும் ஆர்த்தி தோக்ரா ஐ.ஏ.எஸ் பெற்றுள்ளார்.


ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரான வசுந்ரா ராஜேவிடத்திலும் தற்போதய முதல்வரான அசோக் கெலாட்டிடத்திலும் நன்மதிப்பை பெற்றுள்ள ஆர்த்தி தோக்ரா, தற்போது ராஜஸ்தான் அரசின் துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.