கோப்பையை வென்ற மெஸ்ஸி:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றினார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டு களித்தனர்.
அதிக லைக்குகளை பெற்ற இன்ஸ்டா பதிவு:
போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கால்பந்தாட்ட உலகக்கோப்பையை தனது கையில் ஏந்தியதை போன்ற, புகைப்படத்தை மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவை பறைசாற்றும் விதமாக அமந்த அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவிய, இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெஸ்ஸியின் பதிவை 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்ததன் மூலம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற்ற பதிவு என்ற பெருமையை பெற்றுள்ளது.
உலக சாதனையை முறியடித்த மெஸ்ஸி:
முன்னதாக வேல்ட் ரிக்கார்டர் எக் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட முட்டையின் புகைப்படம் ஒன்று 5 கோடியே 55 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை மெஸ்ஸியின் உலகக்கோப்பை வெற்றிப் பதிவு முறியடித்துள்ளது. அதோடு, இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற விளையாட்டு வீரரின் பதிவு என்ற ரொனால்டோ வெளியிட்ட பதிவின் சாதனையை, 4.3 கோடி லைக்குகளை பெற்றபோது மெஸ்ஸியின் பதிவு முறியடித்தது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக மெஸ்ஸியுடன் சேர்ந்து செஸ் விளையாடுவதை போன்று, ரொனால்டோ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு 4.2 கோடி லைக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.