ஓசை என்ற சூழல் அமைப்பை சேர்ந்த காளிதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்  துறையிலிருந்து கடந்த 14.12.2022இல் ஒரு  அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி காப்புக் காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வரை எவ்வித அகழ்வு மற்றும் சுரங்கத் (quarry and mining) தொழில் நடைபெறக்கூடாது என்கிற தடை தளர்த்தப்பட்டிருக்கிறது.  இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும். சுரங்கத் துறை அமைச்சகத்திடமிருந்து கோரிக்கை வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 


தமிழகத்தில் காடுகளை ஒட்டியுள்ள எல்லா பகுதிகளிலும்  மனித - காட்டுயிர் முரண் நிலவுகிறது. தற்போது வனத்துறைக்கு சொந்தமான நிலம் என்று வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமல்லாது காட்டை ஒட்டிய பிற பகுதிகளையும்  பல ஆயிரம் ஆண்டுகளாக காட்டு விலங்குகள் பயன்படுத்தி வருகின்றன. காட்டு நிலம், வருவாய்த்துறை நிலம், தனியார் நிலம் என்ற பிரிவினைகள் எல்லாம் நமக்குத்தான்.  நமது நிலப் பாகுபாடுகளை காட்டுயிர்கள் அறியாது.  அந்த இடங்களில் எவ்வித தடை ஏற்பட்டாலும் விலங்குகளின் இயல்பான வலசை பாதிக்கப்பட்டு, அவை விளைநிலங்களுக்கும் மனித குடியிருப்புகளுக்கும் புகுந்துவிடும். 


குறிப்பாக யானைகளும் காட்டு மாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். வேளாண்மையும் பாதிக்கப்படும். காப்புக்காடுகளுக்கு மட்டுமே விதி தளர்த்தப்பட்டிருப்பதாகவும் வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் (elephant corridor) ஆகியவற்றில் ஒரு கிலோமீட்டர் வரை சுரங்கப் பணிகளுக்கு உள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு  மலைத்தொடர்களில் பெரும்பாலும் காப்புக் காடுகளே உள்ளன. அவற்றை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது. 




Right of Passage எனும் இந்திய யானைகள் திட்டத்தின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தமிழகத்தில் யானைகள் வலசை பாதைகள் 17 மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பல பாதைகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. யானைகளின் இரு பெரும் வாழ்விடங்களை இணைக்கும் குறுகிய வலசைப் பாதைகளை குறிக்கவே corridor என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை இணைப்புப் பாதைகள் எனலாம். இந்த இணைப்புப் பாதைகளுக்கு நிகராக யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகள் ( traditional migratory paths) அனைத்தும் முக்கியமானவை. அவை தடைபட்டு விடக்கூடாது.


கோவை அருகே தடாகம் பகுதியில்  செங்கல் சூளைகளுக்காக   காடுகளை ஒட்டி தோண்டப்பட்ட பெருங்குழிகளால் யானைகளின் வலசை பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அங்கு சுரங்கப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதை நாம் அறிவோம். தற்போது எல்லா இடங்களிலும் சுரங்கப் பணிகளுக்கு அனுமதித்திருப்பது வேதனைக்குரிய செய்தியாகும். அதுபோலவே கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து காடுகளை ஒட்டி உள்ள மலைகளை சிதைத்து கற்களும் மண்ணும் அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லும் அவலம் இனி சட்டரீதியாக தொடரும். 


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தின் காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் பல சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார். அவருக்கு இயற்கை ஆர்வலர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் தலையிட்டு இந்த அறிவிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண