தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மீண்டும் மே 18 முதல் 29-ஆம் தேதி வரை 12-வது தேசிய அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வீரர்களில் கோவில்பட்டியை சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.




இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர் பெற்ற நகங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, இங்கு இருந்து ஹாக்கி வீரர்கள், இந்திய ஹாக்கி, தேசிய அணி மற்றும் புகழ்பெற்ற பல ஹாக்கி அணிகளில் விளையாடி உள்ளனர். ஹாக்கி வீரர்கள் மட்டுமல்ல, இங்குள்ள ரசிகர்கள் போட்டியின் நுணுக்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பதால் கோவில்பட்டி ஹாக்கிப்பட்டி என்று அழைப்பது வழக்கம். 




புகழ்பெற்ற கோவில்பட்டியில் உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11 தேசிய ஜூனியர் ஆண்கள் சாம்பியன் ஷீப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் உத்தரபிரதேச ஹாக்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவில்பட்டி நகரில் இந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் சாம்பியன் ஷீப் ஹாக்கி போட்டி மீண்டும் கோவில்பட்டி செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


வரும் மே 18 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணி காலியிறுதி வரை சென்றது. இதில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயின்ற 11 வீரர்கள் தமிழக அணிக்காக விளையாடினர். இதில் 9 பேர் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள். இதில் 5 பேர் தேசிய பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது. 




இந்நிலையில் 12வது தேசிய ஜீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடும் வீரர்கள் தேர்வு 27 மற்றும் 28 ஆகிய நாள்களில் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 214 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 30 வீரர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட்டு வீரர்களுக்கு 30 நாள்கள் ஒடிசாவில் பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அணிக்காக  போட்டியில் விளையாடும் 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.




தமிழக அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வீரர்களின் 11 பேர் கோவில்பட்டி நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. கோவில்பட்டியை சேர்ந்த முருகேஷ், மாதவன், சந்தோஸ், நவீன் ராஜகுமார், திவாகர், மாதவன், முத்துக்குமார், சந்திரநாத், ஆனந்தராஜ், திலீபன், முத்துக்குமார் ஆகிய 11 வீரர்களும் ஓடிசா நடைபெறும் பயிற்சி முகாமிற்கு சென்றுள்ளனர். தொடர்ச்சியாக 2வது முறையாக கோவில்பட்டி தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நடைபெறுவது மட்டுமின்றி, மீண்டும் கோவில்பட்டி வீரர்கள் அதிகளவில் பயற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ஹாக்கி வீரர்கள் மற்றும் ஹாக்கி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.