ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் பிரித்வி ஷா கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். குறிப்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர் சிவம் மாவி வீசிய முதல் ஓவரிலேயே 25 ரன்கள் விளாசினார்.
இதன்மூலம் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்தார். இதற்கு முன்பாக 2013ஆம் ஆண்டு ரஹானே ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்திருந்தார். அத்துடன் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் 13ஆவது இடத்தை பிரித்வி ஷா பிடித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்த டாப்-5 வீரர்கள் யார் யார்?
5.கிறிஸ் கெயில் (17):
2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் தொடக்கம் முதல் அதிரடி காட்டினார். இவர் 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் இதேபோட்டியில் 30 பந்துகளில் அதிவேக சதம் கடந்தும் அசத்தினார். இந்தப் போட்டியில் 175 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஐபிஎல் வரலற்றில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
4. சுரேஷ் ரெய்னா(16):
2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டினார். இப்போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் இந்தப் போட்டியில் 6 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்கள் விளாசி 87 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக அரைசதம் இதுவாகும்.
3. சுனில் நரேன்(15):
2017ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் சுனில் நரேன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தினார். முதலில் பந்துவீசிய கொல்கத்தா அணிக்கு 2 விக்கெட் வீழ்த்தி நரேன் சிறப்பாக செயல்பட்டார். இதன்பின்னர் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பெங்களூரு பந்துவீச்சை திணறடித்தார். 15 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உதவியுடன் அரைசதம் கடந்து அசத்தினார்.
2. யுசஃப் பதான்:
2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் விக்கெட் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய யுசஃப் பதான் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இவர் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார். மேலும் 22 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் உதவியுடன் 72 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
1.கே.எல்.ராகுல்:
2018ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 167 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. அப்போது பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் அதிரடி துவக்கம் அளித்தார். இவர் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்தார். இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உதவியுடன் ராகுல் 51 ரன்கள் குவித்தார்.