இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.53 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சமயத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


 


இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு இருக்கும் மக்கள் என் மீது அதிகளவில் அன்பு பாராட்டியுள்ளனர். அவர்கள் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் அவதிப்பட்டு வருவதை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. 


 






 


இந்த தொற்று பாதிப்பு நடுவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் ஐபிஎல் போட்டிகள் அமைந்துள்ளதாக கருதி இந்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும்.  விளையாட்டு வீரர்களாக நாங்கள் பலரை மகிழ்ச்சி அடைய செய்கிறோம். அத்துடன் பலருக்கு உதவும் வாய்ப்பு எங்களுக்கும் உள்ளது. எனவே நான் இந்தியாவிற்கு கொரோனா தடுப்புக்கு உதவ வேண்டும் நினைத்தேன். அதனால் 50,000 அமெரிக்க டாலர்கள் (37.36 லட்சம் ரூபாய்)நன்கொடையாக பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன்.என்னுடைய உதவி ஒரு தொடக்கமாக கருதி மேலும் பல வீரர்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.


 






 


பேட் கம்மின்ஸ் நிதியுதவி அளித்ததற்கு ட்விட்டரில் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் முன்வராத நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் உதவி இருப்பது பெரிய செயல் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலர் கம்மின்ஸூக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். 




முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் புனேவில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க உதவி செய்திருந்தார். அதன்பின்னர் பேட் கம்மின்ஸ் தற்போது கொரோனா நிவாரண பணிகளுக்கு நன்கொடை அளித்துள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து ஆண்ட்ரூ டை, அடேம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் விலகியுள்ள நிலையில் பேட் கம்மின்ஸ் உதவி செய்துள்ளது  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2019ஆம்  ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பேட் கம்மின்ஸ் 15.5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது.