கோவை பீளமேடு ரங்க விலாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். அப்பகுதியில் அவர் தினமும் வந்து செல்லும் போது அங்குள்ள தெரு நாய் ஒன்று, அவரை அடிக்கடி குரைத்து, முறைத்து மிரட்டி வந்துள்ளது. இதனால் பாலசுந்தரம், நாய் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் நாய் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், நாயை என்ன செய்வது என யாரும் பாலசுந்திரத்தின் புகாரை கண்டுகொள்ளவில்லை.



 

பொறுத்திருந்து பொறுமை இழந்த பாலசுந்தரம், தாமே கோதாவில் இறங்க முடிவு செய்தார். தனக்கு தொடர்ந்து டார்ச்சர் அளித்து வரும் தெரு நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். ஆள் வைத்து நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதற்கு ஏற்ற நபரை தேடியுள்ளார். அப்போது ஒடிசாவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மிதுன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாயை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டு, அதை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அதன் கழுத்தை நெறித்தும், மரக்கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், உடனே அது குறித்து மாவட்ட விலங்குகள் நல அதிகாரி பிரதீப்பிற்கு புகார் அளித்துள்ளனர்.



 

பிரதீப் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், நாயை கொலை செய்த வழக்கில் பாலசுந்தரம், மிதுன் ஆகிய இருவர் மீதும் விலங்குகளை கொல்லுதல் மற்றும் விலங்குகள் வன்கொடுமை சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து கோவை மாவட்ட விலங்குகள் நல அதிகாரி பிரதீப் கூறுகையில், "அப்பகுதியில் இருந்த வீடில்லாத தெரு நாயினை பாலசுந்தரத்திற்கு பிடிக்கவில்லை. அதனை கொலை செய்ய வேண்டும் என பத்து நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். அதனை மற்றவர்கள் ஏற்காததால் மிதுனுடன் இணைந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாய்க்கு உடல்கூராய்வு நடத்தப்பட்டது" என்று கூறினார்.