செஸ் விளையாட்டில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது இந்தியாவிலிருந்து 76வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரனவ் ஆனந்த் வென்றுள்ளார். இவர் 14 வயது 3 மாதங்கள் மற்றும் 15 நாட்களில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்று இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் விரைவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டு ஜூலை மாதம் இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கான கடைசி தேவையை பூர்த்தி செய்திருந்தார். எனினும் இவருடைய தரவரிசை புள்ளிகள் குறைவாக இருந்ததால் அப்போது இவருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது உலக யுத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் பிரனவ் ஆனந்த் பங்கேற்று இருந்தார்.
இவர் நேற்று நடைபெற்ற போட்டியில் சர்வதேச மாஸ்டர் எமின் ஒஹன்யானை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனவ் ஆனந்த் போட்டியை வென்றார். இதன்மூலம் சர்வதேச மாஸ்டராக இருந்த பிரனவ் ஆனந்த் 2500 தரவரிசை புள்ளிகளை தாண்டினார். அத்துடன் இந்தியாவின் 76வது கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரனவ் ஆனந்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் வெங்கடாசலம் சரவணன் பயிற்சியாளராக இருந்து வருகிறார். பிரனவ் ஆனந்த் 16 வயதில் இந்தியாவின் 76வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளதற்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிலுள்ள 76 கிராண்ட் மாஸ்டர்களில் 30 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குறிப்பாக பிரக்ஞானந்தா, குகேஷ் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தாண்டில் 3 முறை வீழ்த்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தது. அதேபோல் தனி நபர் பிரிவிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கம் வென்று இருந்தனர்.
மேலும் படிக்க: "அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர்..."-ஃபெடரருக்கு நடால் பதிவு..