டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ரோஜர் ஃபெடரர். இவர் 24 ஆண்டுகளாக டென்னிஸ் உலகை கலக்கி வந்தார். இந்தச் சூழலில் நேற்று திடீரென்று அவர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இவருடைய ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியை அடைய வைத்திருந்தது. 


 


இந்நிலையில் இது தொடர்பாக சக டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஒரு பதிவை செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் நடால் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர். இந்த நாள் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கும் டென்னிஸ் விளையாட்டிற்கும் சோகமான நாள் இது. உங்களுடன் இத்தனை நாட்கள் விளையாடியதை மிகுந்து மகிழ்ச்சியும், கௌரவுமாகவும் கருதுகிறேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல நல்ல தருணங்கள் இருந்தது.


 






இது போன்ற தருணங்கள் நம்மக்குள் மேலும் இருக்கும். ஏனென்றால் நாம் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையே உள்ளன. அது உங்களுக்கு தெரியும். தற்போது நீங்கள் உங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். லண்டனில் விரைவில் சந்திப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.


 


அவரின் இந்தப் பதிவை பலரும் ரிட்வீட் செய்து நடால், ஃபெடரர் இடையேயான பந்தம் தொடர்பானவற்றை பதிவிட்டு வருகின்றனர். 


 


ரோஜர் ஃபெடரர் vs ரஃபேல் நடால்:


 


டென்னிஸ் களத்தில் மிகச் சிறந்த ஆட்டங்களில் எப்போதும் ரோஜர் ஃபெடரர் மற்றும் நடால் ஆகியோருக்கு எதிரான போட்டி இருக்கும். இவர்கள் இருவரும் டென்னிஸ் களத்தில் 40 முறை எதிராக மோதியுள்ளனர். அவற்றில் நடால் 24 முறையும், ஃபெடரர் 16 முறையும் வென்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக இவர்களுக்கு இடையே நடைபெற்ற 8 போட்டிகளில் 7ல் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் கடைசியாக ஃபெடரர் நடால் மோதியிருந்தனர். அதில் ரோஜர் ஃபெடரர் 4 செட்களில் போராடி போட்டியை வென்று இருந்தார். அதன்பின்னர் இருவரும் டென்னிஸ் களத்தில் சந்திக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் போட்டி எப்போதும் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும். 


 


ரோஜர் ஃபெடரர் தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் சுமார் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அத்துடன் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார். அதிக முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீரர் ரோஜர் ஃபெடரர் தான். இவர் 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.