பொதுவாக எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் இரு நாடுகள் விளையாடும் அது மிகவும் முக்கியத்துவம் அடையும். அப்படிப்பட்ட இரு நாடுகள் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான். இந்த இரு அணிகள் மோதும் கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட எந்த போட்டியாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக அந்தப் போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கபடி போட்டி ஒன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் கபடி சங்க செயலாளர் ரானா முகமது சர்வார் தகவல் தெரிவித்துள்ளார். அதில்,"ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நடைபெற உள்ளது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கபடி அணிகள் அடுத்த ஆண்டு ஒரு கபடி போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கர்தார்பூர் வழித்தடத்தின் அருகே நடைபெறும். இந்த ஒரு போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் அவர்களுடைய நாட்டிற்கு திரும்பிவிடுவார்கள். அதன்பின்னர் இந்தியா,பாகிஸ்தான்,கனடா மற்றும் ஈரான் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கபடி போட்டி லாஹூரில் நடைபெற உள்ளது.




அந்த சர்வதேச போட்டிக்கு முன்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்பு ரிதியிலான இந்தப் போட்டி நடைபெறும். எனினும் இந்தப் போட்டியின் சரியான தேதி இன்னும் முடிவாகவில்லை. அந்த தேதி குறித்து நாங்கள் கலந்து ஆலோசித்து பின்னர் அறிவிப்போம்" எனக் கூறியுள்ளார்.  கபடி விளையாட்டில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தொட வேண்டும் என்பதால் கொரோனா சூழல் காரணமாக கபடி போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. 


இந்தச் சூழலில் அடுத்த ஆண்டு நிலைமை சற்று சரியான பிறகு மீண்டும் கபடி போட்டிகள் நடைபெற தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த மார்ச் மாதம் இந்தப் போட்டிகள் நடத்த நல்ல சூழல் உருவாகும் என்று இரு தரப்பும் நம்பியுள்ளதாக தெரிகிறது. எனினும் இந்திய தரப்பில் இருந்து இதுவரை இந்தப் போட்டி தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் எதிர்த்து விளையாடினர். அதன்பின்னர் இந்த இரு அணிகளும் எதிர்த்து விளையாடவில்லை 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: எப்படியாவது ஜெயிச்சுடுப்பா..! ஆவலுடன் இந்தியா!! அதிசயம் செய்யுமா ஆப்கானிஸ்தான்...!?